18
வேண்டும் விடுதலை
“தனித்தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டத்தை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. தென்னிந்தியர் மேல் வட நாட்டினர் இந்திமொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதானால், நாட்டு விடுதலைப் போராட்டத்தை மீண்டும் நான் தொடங்குவேன்” என்று அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. இரா. பெரியார் வேலூரில் பேசியுள்ளதாகச் செய்தித் தாள்களில் செய்தி வந்துள்ளது. செய்தி உண்மையோ பொய்யோ என்று தெளிவாகக் கூறமுடியாமற் போனாலும், பெரியார் உள்ளத்தில் இருப்பதாகக் கூறப்பெறும் விடுதலை உணர்ச்சி பெரும்பாலான தமிழர்களின் உள்ளத்தில் பெரிய புயல் வடிவாகக் காழ்த்துக் கொண்டிருப்பது உண்மையே! முதலமைச்சர் திரு. பக்தவத்சலத்தின் வல்லாண்மைத்தனத்தால் தமிழ்மொழிக் காப்புணர்வும் தமிழ்நாட்டு விடுதலை ஆர்வமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கிய அரசினரின் அடக்கு முறை வலுக்க வலுக்கத் தமிழர்களும் தங்கள் கைகளை முருக்கேற்றிக் கொண்டும், தங்கள் நெஞ்சங்களில் கனப் பேற்றிக் கொண்டும் வருகின்றனர் என்பதை வடவர் மறந்துவிடக் கூடாது.
இந்திய நாட்டின் எல்லைச் சண்டைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு, இந்திய அரசினர் நாட்டு ஒற்றுமையை மிகவும் வலுப்படுத்துகின்றனர். மன ஒருமைப்பாட்டாலன்றிச் சட்டத்தாலும் கடுமையான அடக்குமுறைகளாலும் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்கி விடலாம் என்று கருதுவதுதான் நமக்கு வியப்பாக விருக்கின்றது. பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் இவ் வொற்றுமையை