பாவலரேறு பெருஞ்சித்திரனார்
323
எழுந்தீ நாற்றம் பரத்தலும்
விழுந்துளி நச்சம் விரிபுனற் கலத்தலும்
அதிரொலி மென்செவிக் கழலெனப் படர்தலுங்
கதிரொளி விரிந்துயிர் கனத்தலு முண்மையின்
முன்னிய கோட்டம் மன்னுயிர்க் கெல்லாம் 5
மின்னுவ தாகலின் உன்னுவ தெவையுந்
தம்மிய வென்னா தமக்கும்
எம்மிய லோர்க்கும் இனிதுற நினைமே!
பொழிப்பு :
எழுகின்ற தீயநாற்றம் இனிய காற்றில் பரவுதலும், விழுகின்ற துளியளவு நஞ்சு பரந்த நீரில் யாண்டும் கலத்தலும், இடிமுழக்கம் செவியின் வெப்பம் போல் பரவுதலும் கதிரவனின் ஒளி யாண்டும் விரிவுற்று அதன் வெப்பம் உயிரினங்களை யெல்லாம் சூடேற்றுதலும் இயல்பாய் இருத்தலின் ஒருவர் மனத்துக் கருதிய கோணல், நிலைபெற்ற உயிர்களுக் கெல்லாம் உள்ளத்தின்கட் பளிச்சிடுவது ஆகலின் மக்கள் மனத்தில் எண்ணுவன எவற்றையும் தம்முடைய எண்ணமே என்று கொள்ளற்க! யாவரும் தமக்கும் மற்றும் எவ்வகைப்பட்ட இயல்பு உடையோர்க்கும் நல்லன விளையுமாறு நினையுமின்!
விரிப்பு :
இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.
காற்றினும் நீரினும், வானினும் பட்ட பொருள்கள் அவற்றினூடே யாண்டும் பரவுதல் காண்டுமாகவின் அவ்வாறே ஒருவர் மனத்துக் கருதும் எண்ணம் மனவெளியினூடே யாண்டும் பரவி மக்கள் மனத்திலெல்லாம் தோன்றும் ஆதலின் நம்மனத்துத் தோன்றுவனவெல்லாம் நாமே கருதுவன அல்ல என்பதை அறிதலோடு தமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும் எண்ணங்களை மனங்கொள்ளுமாறு அறிவுறுத்துவது இப் பாட்டு,
எழும் தீ நாற்றம் இன் வளி பரத்தலும்- எழுகின்ற தீயநாற்றம் இனிய காற்றில்யாண்டும் பரவுதலும்.நறுமணமும் யாண்டும் பரவுவதே யெனினும் தீய நாற்றமே விரைந்து உணரப்படுதலின் அதனைக் கூறினார். நாற்றம் தீய-