உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அம்மாவின் அந்திய நேரம்
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰


அம்மாவுக்கு நோய் கண்ட அன்று மாலை பெரியண்ணா வந்திருந்தார். கல்யாணமான நாளிலிருந்து அவர் அம்மாவோடு பேசுவதும் இல்லை; வீட்டுக்கு வருவதும் இல்லை. அன்று வந்தவர் வாசலிலேயே நின்று விசாரித்துவிட்டுப் பார்க்காமல் போய் விட்டார். காலரா கண்டு குணமடைந்தவன் ஆகையால் நான் அம்மாவின் அருகிலேயே இருந்தேன். அப்போது எனக்கு என்றுமில்லாத துணிவு ஏற்பட்டிருந்தது. அம்மாவின் வயிற்றில் பூச டாக்டர் ஒரு மருந்து கொடுத்திருந்தார். நான் அந்த மருந்தைப் பூசிக் கொண்டிருந்தேன். மதினி கோதுமைத் தவிடு வறுத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை வாங்கி டாக்டர் சொன்னபடி ஒத்தடம் கொடுத்தேன். அம்மாவுக்குத் தன் நினைவு இல்லை, கண்கள் மேலே சொருகின. மதினி பயந்து அழத் தொடங்கினார்கள். வெளியே சின்னண்ணாவும் மரணத் தருவாயில் படுத்திருப்பதைச் சைகையால் காட்டி, நான் மதினியின் அழுகையை அடக்கினேன்... சில நிமிடங்களில் அம்மா மீண்டும் கண் திறந்தார்கள். “பெரியண்ணாவை அழைத்து வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன். அம்மா வேண்டாமென்று கையசைத்தார்கள். பேச முடியவில்லை. கோதுமைத் தவிடு கொடுத்துவிட்டுப் போன மதினியைச் சுட்டிக் காட்டி “அவளைக் கை விடாதிருக்கச் சொல்” என்று ஜாடை காட்டினார்கள். மீண்டும் ஏதோ சொல்ல முயன்றார்கள். பேச்சு வரவில்லை. நான் அருகில் குனிந்து ‘என்னம்மா’ என்றேன். அவர்கள் காட்டிய சைகையிலிருந்து தங்கைமார்களை நினைவுபடுத்துவதாகப் புரிந்து கொண்டேன். “சுப்பு-காமாட்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அம்மா” என்றேன். அம்மாவின் கண்கள் மலர்ந்தன. சற்று நேரத்தில் மீண்டும் கண்கள் மேலே சொருகிக் கொண்டன. அம்மா உறங்குவதாக நினைத்து நான் வெளியே வந்தேன்.