உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


எண்ணில் அடங்காதன என்பதும் ஆசிரியர் திருவள்ளுவர் கருத்தாதல் நன்கு புலனாகும்.

இறைவனைக் குறித்த தொடர்களாகத் திருவள்ளுவர் கூறியவற்றுள் முதற் குறளில் அமைந்தது ஆதிபகவன் என்பதாகும். இதனை இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொண்டு ஆதியாகிய பகவன் என விரித்து முதற் கடவுள் எனப்பொருள் கொள்வர் பரிமேலழகர். இத் தொடரை ஆதியோடு கூடிய பகவன் என விரித்துப் பொருள் கொள்வர் ஆளுடைய பிள்ளையார். இத்தொடரில் ஆதி என்பது எப்பொருளையும் தோற்றுவிக்கும் அன்னையாகிய சத்தியை. உலகத் தோற்றத் திற்குக் காரணமானவள் என்ற பொருளில் ஆதி என்னும் சொல் சத்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயர் ஆயிற்று. ஆதியாகிய சத்தியோடு பிரிவின்றித் திகழ்வோன் இறைவன் என்பது இத்தொடரின் பொருள் ஆகும். ஆதல் என்னும் வினைப்பகுதி யடியாகப் பிறந்த ”ஆதன், ஆதி” என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்களுக்கு இட்டு வழங்கும் பெயர்களாக ஆளப் பெற்றுள்ளமையால், திருவள்ளுவர் குறித்த ஆதி என்னும் இச்சொல் உலகுயிர்களைப்படைத்துக் காக்கும் இறைவனது பேராற்றலாகிய அருட்சத்தியைக் குறித்த தமிழ்ப் பெயரெனவே கொள்ளத் தகுவதாகும். ஆதியாகிய சத்தியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் என்பது புலப்பட “ஆதி பகவன்' என்றார் திருவள்ளுவர்.

சத்தியுள் ஆதியோர் தையல்பங்கன் (1-115-4) என வரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர், ஆதி பகவன் என்னும் இத்திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அறியத் தகுவதாகும்.