பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


வற்புறுத்தியுள்ளார். இவ்வாறே தேவார ஆசிரியர்களும் "ஒருவனார்" (7-76-1) "ஒருவர்தாம் பலபேருளர் காண்மினே" என்றாங்கு இறைவன் ஒருவனே எனத் தெளிந்து போற்றியுள்ளார்கள். அறிவினாற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்தகையாரும் "ஒருவன் என்னும் ஒருவன் காண்க" (திருவண்டப்பகுதி வரி 43). எனவும் "சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே.” (கோவில் திருப்பதிகம் 9)எனவும் "ஒருத்தனே" (அருட்பத்து 2) எனவும் போற்றி யுள்ளமையால் ஒருதெய்வக் கொள்கையே திருமுறை ஆசிரியர்களின் துணிபாகும் என்பது நன்கு தெளியப்படும். ”ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” எனத்தொடங்கும் பட்டினத்தடிகள் பாடலும் "அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் திருப்பாடலும் தெய்வம் ஒன்றே என்னும் இத்துணியினை நன்கு வற்புறுத்துதல் காணலாம்.

திருமூலர் முதலிய திருமுறை ஆசிரியர்கள் கடவுள் ஒருவரே எனத் தெளிந்து உணர்த்தியது போலவே அவ்வருள் ஆசிரியர்களின் வாய்மொழிகளை உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலாரும் தாம்பாடிய திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலையில் "திருச்சிற்றம்பலத் தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்" எனத்தெளிவுபட அறிவுறுத்தியுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும்.

இறைவனை வழிபட்டு நற்பேறு அடைதற்குரிய ஆன்மாக்களை அடிசேர்ந்தார், புகழ்புரிந்தார், ஒழுக்கநெறி நின்றார் என்றாங்குப் பன்மை வாசகத்தால் திருவள்ளுவர் கூறுதலால் உயிர்கள் பல என்பதும் 'துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” என்னும் திருக்குறளால் அவ்வுயிர்கள்