80
நூறாசிரியம்
வானினு முயர்க நெஞ்சே வானத்து
மீனினும் படர்கதன் நினைவே, மின்னினும்
ஆன்றொளி சுடர்கநல் அறிவே, அறிவதும்
வாரியின் மிகுகவன் வலியே; வளியினும்
தான்றிற முறுக; தணலினுந் தெறுக;
5
தண்ணினுந் தண்ணுக மண்ணினுந் திண்ணுக;
நுண்ணிய அணுவினும் நுண்ணிய தாகுக;
ஆவியும் மெய்யு மாகி
மாவினும் புள்ளினும் மயங்கியோர் பாலே!
பொழிப்பு:
சேய்த்தோர்க்கு அணிமையும் அணிந்தோர்க்குச் சேய்மையுமாய்ப் புலப்படும் வானைவிட உயர்ந்து செல்க, நெஞ்சமே. அவ் வானத்துள்ள மீன் கூட்டத்தை விடப் படர்ந்துபட்டு விளங்குவதாகுக, அதினின் றெழும் நினைவுகள்! மின்னலை விட மிகுந்து சுடர் விடுவதாகுக அறிவு. அவ் வறிவின் வலிமை மழை முகிலை விட மிகுவதாகட்டும், காற்றை விடத் திறம் பெறுவதாகட்டும்! தீயை விடச் சூடு மிகுவதாகட்டும்; குளிர்ந்த நீரை விடக் குளிர்வதாகட்டும்; நிலத்தைவிட இறுகலுறட்டும்; நுண்மையெய்திய அணுவை விட நுண்மை உடையதாகட்டும்; உயிரும் உடலு மட்டுமே ஆகியிருந்து உள்ளம் விளக்க முறாமல் விலங்கு போலும் பறவை போலும் பிறர் மயக்கமுற நிற்பவரிடத்தே!
விரிப்பு :
இப்பாடல் புறத் துறையைச் சார்ந்ததாகும்.
உயிரும் உடலும் பொதிந்த உருவெளித் தோற்றத்தால் மக்களைப் போலும் உள்ளத்தால் விலங்கைப் போலும் பறவையைப் போலும் பிறர் தோற்றங்கண்டு ஒத்தஇனம் என்று விரும்பவும், உள்ளங் கண்டு வேறினமோ என ஐயறவும் மயங்கவும் இடனாக வுள்ளவரிடத்து நம் நெஞ்சம் எவ் வகையில் திறமுறல் வேண்டும் என்பதாகக் கூறியதாகு மிப்பாட்டு.
இவ்வுலகத்துள்ள மாந்தர் யாவரும் ஒருரு ஒரு நிறையாகத் தோற்றமுற்றிருப்பினும் அவர் தம்மை வேறுபடுத்திக் கூறுதல் குற்றமன்றோ எனில் கூறுதும். மாந்தர் யாவரும் நிலத்து விழுந்த நீர் போல் முந்தை
6