பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
அப்பம் தின்ற
முயல்

அது ஒரு மலைக்காடு. ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த மலைக் காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது.

ஒரு நாள் அந்தக் குட்டி முயல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாகத் துள்ளிப் பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து, பாய்ந்து ஒடிக் கொண்டிருந்த அந்தக் குட்டி முயலுக்குத் திடீரென்று ஒர் ஆசை தோன்றியது.

மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தான் அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும், நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே, மேலே சென்று கொண்டிருந்தது. போகப் போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்நது.