பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


ஆண்முயலும் குட்டிமுயலும் அந்தப் பந்தின் ஊடாகப் பாய்ந்தன. இங்கும் அங்குமாகச் சுழித்துத் திரும்பித் தாவி விளையாடின. அந்தச் சிறுவனும் சிறுமியும் முயல்களின் விளையாட்டை மிக ஆவலோடு கவனித்தார்கள். அவர்களுக்கு அந்த முயல்களைப் பிடித்துத் தங்கள் மடியில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசையாய் இருந்தது. அந்த முயல்களை நோக்கி ஓடி வந்தார்கள்.

ஆனால் முயல்கள் பிடிபடாமல் தப்பிக்கொண்டேயிருந்தன. முயல்களைப் பிடிக்க முடியவில்லை என்றவுடன் அந்தச் சிறுமி தரையில் உட்கார்ந்து கொண்டு அழுதாள். சிறுவன் அவளை அழாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஆண்முயல் அதைப் பார்த்து இரக்கங் கொண்டது.

மெல்ல அந்தச் சிறுமியின் அருகில் சென்றது. குட்டி முயலும் அதைத் தொடர்ந்து சென்றது.

“முத்தம்மா, கண்ணைத் திறந்து பார். முயல்கள் உன்னிடம் வந்து விட்டன” என்று சிறுவன் கத்தினான். அந்தச் சிறுமி அழுகையை நிறுத்தி விட்டுக் கண்ணைத் திறந்தாள்.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இரண்டு முயல்களையும் இரண்டு கைகளாலும் முதுகில் தடவிக் கொடுத்தாள். அன்போடு வாரித் துக்கி மடியில் வைத்துக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.