பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

21

சொக்கலிங்கமும். எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவ்வப் போது தங்கையிடம் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும், பணம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை பெருமாள். மனைவியை உதைத்துப் போட்டுவிட்டு, எடுத்துக்கொண்டு போகிற செய்தி. சொக்கலிங்கத்திற்கும் கேளாமலே போய்ச் சேர்ந்தது தங்கை அடிபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தோடு, இன்னும் பல காரணங்களும் சேர, அவர் பணத்தை நிறுத்தினாரே தவிர, பாசத்தை நிறுத்தவில்லை.

அந்தப் பாசத்திற்கும் ஒருசமயம் பங்கம் வந்தது. தங்கையின் வீட்டுக்குப் போயிருந்த அவரை அப்போது குடித்துவிட்டு வந்த பெருமாள், "ஏண்டா... சோமாறி... என் பெண்டாட்டிக்கிட்ட வத்தி வைக்கவாடா வந்தே..." என்று சொல்லி, கையைக் காலை ஆட்டினார். அது ஒரு பாவலாதான் என்பதை சொக்கலிங்கம் புரிந்து கொண்டாலும் அன்று முதல் தங்கையின் குடும்பத்திடம் இருந்து, கிட்டத்தட்ட அடியோடு ஒதுங்கிக் கொண்டார். போதாக்குறைக்கு, பார்வதியின் அண்ணன்கள், கழுதைகூட சேர்ந்தால், கவரிமானும் எதையோ தின்னும் என்கிறது மாதிரி ஆயிடப்போகுது. பெருமாள் உங்களை மாதிரி ஆக முடியாட்டாலும் கவலை இல்லை. நீங்க அவனை மாதிரி ஆகிடக்கூடாது பாருங்க. அதனால..." என்று மேற்கொண்டு பேசாமல் விட்டபோது, சொக்கலிங்கம் "அதனால" என்பதற்கு உண்டான அர்த்தங்களைப் புரிந்துகொண்டார். பார்வதியும் ஒத்துப் பாடினாள். சொக்கலிங்கம் தங்கை வீட்டை எட்டிப் பார்ப்பதே இல்லை. உயிருக்குயிராய் நேசித்த தன் தங்கையை, தன் உயிருக்குள்ளேயே சங்கமித்துக் கொண்டவர்போல், அவளிடமும், அவர் பாராமுகமாய் இருந்தார். செல்லம்மாதான் எப்போதாவது, அண்ணனின் நினைவு வரும்போதெல்லாம். அவர் வீட்டுக்குப் போவாள். அதுவும் அவளுக்குக் குழந்தை குட்டிகள் அதிகமாக அதிகமாக, அவள் வரவும் குறைந்துகொண்டே வந்தது.

பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில், சொக்கலிங்கம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது, பெருமாள், பிள்ளைகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். 'துள்ளி' விளையாட பிள்ளை பிறக்காததில், சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். சிலர். அவருக்கு மறுமண யோசனையைத் தெரிவித்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட, அப்போதைய இளம்பெண்ணான பார்வதி. தூக்கில் தொங்கப்போவதாகச் சப்தத்தையும். சபதத்தையும் சேர்த்துப் போட்டதோடு நில்லாமல் ஒரு கயிற்றை - அவள் தொங்கினால் அறுந்து விழக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கயிற்றை, கையில் வைத்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/35&oldid=1133682" இலிருந்து மீள்விக்கப்பட்டது