பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 5

சொக்கலிங்கமும், பெருமாளும் ஒரு காலத்தில் பிராணச் சிநேகிதர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஒன்றாகவே சுவரேறிக் குதித்தவர்கள் நெல்லை மாவட்டத்திலிருந்து, இருபது வயதிலேயே 'பஞ்சம்' பிழைப்பதற்காக, ஒரே டிக்கட்டை எடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் எப்படியோ மாற்றி மாற்றிக் காட்டி, சென்னை வந்தார்கள்.

இந்தியா விடுதலையான சமயம் அது. அந்தச் சுதந்திரம் கொடுத்த சந்தர்ப்பங்களால், பல்வேறு வியாபாரங்களைச் செய்த இருவரும், பலமாகச் சம்பாதித்தார்கள். சொக்கலிங்கம், பெருமாளின் சார்பில், பல இடங்களுக்குப் போய், அலைந்து, அவருக்கு இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தார். பெருமாள், சொக்கலிங்கத்திற்காகச் சுற்றியலைந்து, மூன்று வீடுகளை வாங்கிக் கொடுத்தார். இப்போது சொக்கலிங்கத்திடம் இருக்கும் அரவை மிஷினுக்கு முன்பணம் கொடுத்ததுகூட இந்தப் பெருமாள்தான். நட்பை, உறவுக் கயிற்றால் நன்றாகக் கட்டவேண்டும் என்று கருதிய சொக்கலிங்கம், கிராமத்தில் இருந்த ஒரே தங்கை செல்லம்மாவின் கழுத்தில், பெருமாள், மஞ்சள் கயிற்றை கட்டும்படிச் செய்தார். சொக்கலிங்கமும், சென்னையில், ஓரளவு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதியைக் கட்டிக்கொண்டார். சொல்லப் போனால், இந்தப் பார்வதியை கட்டிவைத்த பெருமையோ அல்லது சிறுமையோ, இந்தப் பெருமாளுக்குத்தான் சேரும்.

கால வேகத்தில் பெருமாள், குதிரை வேகத்தைக் கணக்கிடப் போனார். தொழிலில் மட்டும் குறியாக இல்லாமல், எல்லோரிடம் சகஜமாகப் பழகும் அவருக்கு. பல்வேறுபட்ட சகவாசங்கள் கிடைத்தன. குதிரைக்குப் பந்தயம் கட்டும் சுந்தரம், இவருக்கு பிராணச் சிநேகிதன். கள்ளுக்கடை கந்தப்பன், இவரிடம் நிஜமான அப்பன் மாதிரியே பழகினான். பருத்திச் சூதாட்டக்காரன் ஒருவன். இவர்மேல் வேட்டி மாதிரி பின்னிக்கொண்டான். போதக்குறைக்கு சோடா பாட்டல்களை எடுத்து வீசும் சோமாறிகளின் பேரன்பும் இவரைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பிடியில், இரண்டு வீடுகளும், போடுபோடென்று ஓடிக்கொண்டிருந்த எண்ணெய் கடையும் எண்ணூர் நிலமும். இவர் பிடியை விட்டு, மீண்டும் பிடிகொடுக்காத அளவுக்குப் போய்விட்டன. பெருமாள். தெருவுக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/34&oldid=1133680" இலிருந்து மீள்விக்கப்பட்டது