உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X

வைத்திருக்கும் பெண் கூட, அவனிடம் உடலுறவு கொள்ள முடியாது என்று மறுக்க இயலவில்லை. கேட்டால் அடி கிடைக்கும். மறுத்தால் உதை விழும். இந்தப் பயத்தின் அடிப்படையில் தத்தம் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று இந்த அறியாமைப் பெண்டிர், தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். இதனால், லட்சோப லட்சம் பெண்கள் வெளியே சொல்லமுடியாத் நரக வேதனையும், அவமானமும் தரும் பாலியல் நோய்களை சகித்துக் கொண்டே ‘வாழ்ந்தபடி’ சாகிறார்கள்.

போதாக்குறைக்கு, இந்த நோய், பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாத உட்புறத்தில் தோன்றுகிறது. இதனால், நோய் முற்றும் வரை, அந்த பாவப்பட்ட பெண்ணுக்கு அதிகமாக அதன் தாக்கம் தெரிவதில்லை. இந்தநிலையில், நோய் வாங்கிய கணவனையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று எந்த வீதி நாடகமோ, எந்தத் திரைப்படமோ, எந்த பத்திரிகையோ, எந்தப் பட்டிமன்றப் பேச்சாளரோ இதுவரை எழுதியதில்லை, சொன்னதில்லை. இந்த லட்சணத்தில், வீதி நாடகங்கள்கூட, இந்த பாலியல் நோய்க்கு காண்டம்களை பயன்படுத்தச் சொல்கிறதே அன்றி, பெண்களை பாலியல் நோய்க்கார கணவனை எதிர்த்து நிற்கச் சொல்லவில்லை. இந்த லட்சணத்தில் இவர்களுக்கு அரசாங்கம் வேறு நிதியளிக்கிறது.

கள ஆய்வுகள்

மத்திய அரசாங்கத்தின் கள விளம்பரத் துறைக்குத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய போது, தமிழகம் முழுவதையும், கிட்டத்தட்ட அங்குலம் அங்குலமாக பார்த்திருக்கிறேன். இப்போதும், அடிக்கடி ‘எஸ்ட்ஸ் தடுப்பு’ வீதி நாடகங்களை பார்வையிட செல்கிறேன். தமிழகம் முழுவதும், இப்படிப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன் - பேசுகிறேன். அந்தந்த இடங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகள், இவர்களைப் பற்றியச் செய்திகளையும் எனக்குத் தெரிவித்துள்ளன.

பாலியல் நிபுனரான டாக்டர். காந்தராஜ், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில், ‘பொம்பளைச் சீக்கு’ என்று கொச்சைப் படுத்தப்படும் இந்த நோயின் விபரீதங்களை படக்காட்சி மூலம் விளக்கினார். இருபது ரூபாய் மருந்து, மாத்திரை, ஊசியில் குணமாகக்கூடிய இந்த நோயை முற்ற விட்டால், அது அகலிகையின் முனிக்கணவர் சாபத்தால், உடம்பு எல்லாம் பெண்குறியாகிப் போன இந்திரனைப்போல, பாதிக்கப் பட்ட ஒவ்வொரு பெண்ணும், ஆணும் மாறுவார்கள் என்று இயல்பாகப் பேசியே அதிர வைத்தார். அவர் காட்டிய பாலியல் நோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/12&oldid=1133654" இலிருந்து மீள்விக்கப்பட்டது