பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

51


தெலுங்கு மாணவர் பிரச்சனை ஏற்பட்ட போது நானும் திமுக மாணவர்களும் ஒன்றுபட்டு போராடி அதன் விளைவாக எங்களில் ஆறு பேர் கல்லூரியில் இருந்து துரத்தப் பட்டோம். அப்போது கல்லூரியின் அறக்கட்டளை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் உதவிக்கு வரவில்லை . காங்கிரஸ் ஆட்சியினர் எனக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

இறுதியில், தந்தை பெரியார்தான் எங்களை காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஆனாலும், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். நானும் காங்கிரஸ் மாணவனாகவே இருந்தேன். அந்த அளவுக்கு தனி நபர்கள் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பின்தள்ளி தாங்கள் கொண்ட தத்துவமே முன்னிலைப் படுத்தப்பட்டது. இதனால் திமுக பேரலையில் தலைவர்களான, அமைச்சர்களான கவிஞர் வேழவேந்தன், வேலூர் விசுவநாதன், துரைமுருகன், ஆலடி அருணா, கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்கள் இன்னும் என் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படி தனிநபர் உறவு பாதிக்கப் படாமல் இருந்த நமது பொது வாழ்க்கை யார் கண்பட்டோ மாசுபட்டு விட்டது.

மாற்று கட்சியான திமுக மாணவர்களோடு ஒன்றிப்போன என்னால் கலைஞரோடு மட்டும் ஒன்ற முடியவில்லை.

1966ஆம் ஆண்டு புதுடில்லி வானொலி நிலையத்தில் தமிழ் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக சேர்ந்தேன். சட்டப் பேரவை தேர்தலில் விருதுநகரில் காமராசர் தோற்ற செய்தியை மத்தியான செய்தியில் அழுதபடியே வாசித்தேன். காமராசர் தோல்வியை அங்கிருந்த கறுப்புத் தமிழர்களும், வெள்ளைத் தமிழர்களும் வாண வேடிக்கையோடு கொண்டாடினார்கள். இதற்கெல்லாம் முதல் காரணம் கலைஞர் என்றே நான் நினைத்தேன். அவர் மீது இருந்த வெறுப்பு மேலும் மேலும் கூடியது.

இந்த தோல்விக்குப் பிறகு காமராசர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் அங்கேயே முகாமிட்டு பெருந்தலைவரை தோற்கடிப்பதற்காக தேர்தல் பிரசாரத்தை முடிக்கி விடுகிறார். ஊர் ஊராக போகிறார். காமராசரை பற்றி காரசாரமாக விவாதிக்கிறார். நான் மட்டும் அவரது தேர்தல் கூட்டத்தை