உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரிய மனுசி

தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான்.

“ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், பூர் பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு நாள் தாமசிக்கிறார்".

இதை முன்னிட்டு சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், ஊழியக்கார இளப்ப சாதிகள், விருத்திக்காரர்கள், அத்தனைபேரும் காணிக்கை, கைப்பொருளோடு வந்து சுசிந்திரம் கச்சேரிக்கு 96அடி தள்ளி நிற்கும்படி ஆக்ஞை இடப்படுகிறார்கள். மகாராஜாவின் வருகைக்கு முன்னதாக நிலவரியான புருசங்தாரம், வாரிசு வரியான அடியறா, வீட்டு வரியான குப்பகாழ்ச்சா மற்றும் பனைவரி, பனையேறும் ஏணிக்கான ஏணிக்காணம், பனை நாருக்கான தலைக்காணம், தலைவரி, முலைவரி, மீசைவரி, தாலிவரி, தாவரவரிகள் போன்ற அத்தனை வரிகளையும் செலுத்திவிட வேண்டும். அதோடு சாதிய அனுஷ்டானங்களை கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு, பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்த தகவல்களை சொல்லாதவர்களுக்கும் சிரச்சேதம் உட்பட எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.'