8
நெருப்புத் தடயங்கள்
கட்டிக்கொண்ட அதே அந்த பொன்மணி "எங்க அக்காவுக்கு என்ன குறை? ஏதோ தயவுபண்ணி காட்டுறது மாதுரி பேசுறீரு? நாங்களும் தமிழரசி அண்ணியை எங்க இன்ஸ்பெக்டர் அண்ணன் தாமோதரனுக்கு எடுக்கணுமேன்னுதான் எங்க அக்காவை கொடுக்கோம். ஞாபகம் இருக்கட்டுமிய்யா" என்றாள்.
தமிழரசிக்கு, யார் சொன்னதும் காதில் விழவில்லை. காதில் விழுந்தாலும் கருத்தில் விழவில்லை. தாமோதரன் வந்திருக்காராமே... அவருக்கே என்னைக் கொடுக்கிறதா தீர்மானமாயிட்டா, குட்! இந்த தடவையாவது அவர் கிட்ட பேசணும். அவரைப் பேச வச்சுடணும். என்னடி இது.... லீவுல அவரைப் பார்த்தால் பேசுறீயே... பேசுராரே... அப்டில்ல! வேறமாதிரி பேசணும்.... 'என்ன சுகமா'ன்னு முன்னால பேசுறது மாதிரிப் பேசப் படாது... 'சுகமாய்' பேசணும்...
கனவுலகில் இருந்து நழுவி, மெள்ள மெள்ள நனவுலகிற்கு வந்த தமிழரசி, பாட்டியை அண்ணன் பலவந்தமாக இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தாள். மனசு கேட்கவில்லை. "பாட்டிக்கு நடக்கத் தெரியும் அண்ணா" என்றாள் பலமாக. பிறகு, அண்ணனின் வன்மம் இல்லாத வன்முறைக்கு பரிகாரம் செய்பவள் போல், "பாட்டி, எங்கேயும் போயிடாதே. சாயங்காலமாய் வாரேன்" என்றாள். திரும்பி ஏதோ பேசப்போன பாட்டியை, ராஜதுரை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தான். இதற்குள், பாட்டிமேல் பார்வை படாதபடி, அவளைப் பெண்கள் கூட்டம் மறைத்தது. ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தாள். ஒட்டுமொத்தமாகப் புன்னகைத்தாள். ஏதேதோ பேச்சுக்கள்; தத்தம் வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைப்புக்கள். தன் மகளிடம் இன்னும் பேச முடியவில்லையே என்று தாய் பகவதியம்மாவின் தவிப்புக்கள். வெளியே கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த