7
'தரும சக்கரப்பிரவர்த்தனம்' என்பர். அதாவது, புத்தர் அற ஆழியை உருட்ட ஆரம்பித்தல் என்று பொருள். அதன் பிறகு அவர் 45 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, நாடும் நகரும், காடும் மலையும் கால் நடையாகச் சென்று மக்களுக்கும் மன்னர்களுக்கும் உபதேசம் செய்து, அற ஆழியை உருட்டிக் கொண்டேயிருந்தார். இலட்சக்கணக்கான மக்கள் அவருடைய பௌத்த சமயத்தை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான பிக்குகள் (பௌத்தத் துறவிகள்) சேர்ந்தனர். அவர்கள் எல்லோரையும் சேர்த்துப் பௌத்த சங்கம் அமைக்கப் பெற்றது. பௌத்த சமயிகளுக்குப் புத்தர், தருமம், சங்கம் என்ற மூன்றுமே அடைக்கலங்கள். பின்னால் கி. மு. 493 ஆம் வருடம் புத்தர், தமது எண்பதாவது வயதில், குசீநகர் என்னுமிடத்தில் பூத உடலை நீத்து மகாபரி–நிருவாணம் அடைந்தார்.
புத்தருடைய சமயம் அருள் மயமானது. அதில் சாதிகள் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் இல்லை; யாரும் சேரலாம். சமயங்களிலே அது ஒரு குடியரசு எனலாம். சுய நலத்தை ஒழித்து, ஆசைகளையும் வெறுப்புக்களையும் அகற்ற வேண்டும்; உள்ளத்தில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு மலர்ந்து பரிமளிக்கச் செய்ய வேண்டும்; ஒழுக்கம் என்னும் உறுதியான பாறைமீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்; மெய்யறிவின் மூலம் அறியாமையைப் போக்க வேண்டும்; அறியாமை போனால் ஆசை ஒழியும்; ஆசை ஒழிந்தால் பிறவியும் ஒழியும்; நிலையான நிருவாணப் பேறு கிடைக்கும்-இதுவே பௌத்த தருமம் மக்களுக்குக் காட்டிய வழி.