இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மொழிமரபு
57
மொழியிடைச்சார்த்தி யுணரப்படுவன ஆகலானும், ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் இவை நூன்மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. சார்ந்து வருதலை மரபாகவுடைய மூன்றற்கும் “அவைதாம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்” என முன்னருரைத்த முறையே ஈண்டு இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய இரண்டிடத்தும் வருமெனக் கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம் புணர்மொழிக் குற்றியலுகரம், ஒருமொழியாய்தம், புணர் மொழியாய்தம், என ஆறாகப் பிரித்து முறையே 34 முதல் 39 வரை உள்ள சூத்திரங்களில் உணர்த்தி 40-ல் அவ்வொருமொழி யாய்தத்திற்கோர் இலக்கணங் கூறியுள்ளார்.
குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே. (தொல். 34)
இஃது ஒருமொழிக்கண் குற்றியலிகரம் நிற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்) ஒருமொழிக் குற்றியலிகரம் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொற்குப் பொருந்தவரும் உரையசைச் சொல்லாகிய ‘மியா’ என்னும் சொல்லின் சினையாகிய ‘யா’ வென்னும் உறுப்பின் மேலதாய் மகரவொற்றினை பூர்ந்து நிற்றலைவேண்டும் ஆசிரியன் எறு.
(உ-ம்) கேண்மியா என வரும்.
மியாவென்னுஞ் சொல் இடம், மகரம் பற்றுக்கோடு; ‘யா’ என்பதும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு.
புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும். (தொல். 35)
இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது.
(இ-ள்) அக்குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணன்றி இரு மொழி தம்முட் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணும் குறுகலுரித்து. அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத் தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும்
எ-று