பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிமரபு

61


மெனக் குற்றியலுகரப் புணரியலுள் கூறினமையான் அவ்வரை மாத்திரையிற் குறுகுமென்பதே அச்சூத்திரக் கருத்தாகலானும் நச்சினார்க்கினியர் உரைத்த உரையே பொருந்துமென்க.

   புணர்மொழிக் குற்றியலுகரமாகிய இதனைப்பற்றி நன்னூலாசிரியர் குறிப்பிடவில்லை.

குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே. (தொல். 38)

  இஃது ஒருமொழி யாய்தம் வருமாறு கூறுகின்றது.
  இ-ள்) புள்ளிவடிவினதாகிய ஆய்தம் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறன் மேலதாய் வரும்.
  (உ-ம்) எஃகு, கஃசு, கஃடு, அஃது, கஃபு, பஃறி என வரும்.
  குற்றெழுத்தின் முன்னரும் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்தின் மேலுமாக இவ்வாய்தவொலி வருமென்று தொல்காப்பியர் வரையறை கூறியதனால் அவர் காலத்து அவற்றிடையே யல்லது ஆய்தம் பயின்று வழங்காமை தெளியப்படும்; இவ்வாய்தவொலி வல்லெழுத்தாறன் மேலதாய் நின்று அவற்றின் வல்லோசையை மெலிவித்து நிற்பதாகும். இவ்வாறு வல்லெழுத்துக்களுக்கு முன்னர் நின்று அவற்றி னோசையை மென்மைப்படுத்தி நிற்கும் இயல்பிற்று ஆய்தம் என்பதனையுணர்ந்த காலஞ்சென்ற உயர்திரு மாணிக்க நாயகரவர்கள் இவ்வெழுத்தின் துணையால் பிறமொழியில் வழங்கும் எல்லா வொலிகளையும் தமிழ்மொழிக்கண் குறித்து வழங்குதல் கூடுமென்று ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள். இவ் வெழுத்தின் துணையால் காஃபி முதலிய பிற மொழிச் சொற் களைத் தமிழ் ஒலி எழுத்துக்களால் வழங்க வழி காட்டியவரும் அவரேயாவர். இத்தொல்காப்பியச் சூத்திரத்தை நன்னூலார் முற்றாய்தம் என்ற பகுதியில் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் எடுத்துக் கூறினார்.

ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். (தொல். 39

  இஃது இவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறு கின்றது.
  (இ-ள்) நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்குமிடத்தில் வேறோரெழுத்தின் ஓசையின்கண் ஆய்தம் தோன்றும் என்றவாறு.