உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றியலுகரப் புணரியல்

219



9. குற்றியலுகரப் புணரியல்
     குற்றியலுகரஈறு நின்று, பொருட்பெயர், எண்ணுப்பெயர் ஆகிய வருமொழிகளோடு புணருமாறு கூறலின், இது குற்றிய லுகரப்புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. ஈரெழுத்தொரு மொழியாய்த் தனிநெட்டெழுத்தின் பின்னும், இரண்டிற்கு மேற்பட மூன்று முதலிய எழுத்துக்களாகிய தொடர்மொழிகளின் ஈற்றிலும் வல்லின மெய்யை ஊர்ந்து குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி யிற்றுக் குற்றுகரங்களை அவற்றின் அயலில் தொடர்ந்துள்ள, எழுத்துவகையால், உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்து தொடராகப் பகுத்து அவற்றுடன் தனி நெடிற் பின்வரும் குற்றுகரத்தையும் கூட்டி அறுவகையாக்கி, அவை உயிர், வலி, மெலி, இடை ஆகிய நாற்கணத்தோடும் புணரும் இயல்பினை இவ்வியலில் விளக்குகின்றார்.
ஈரெழுத் தொருமொழி, உயிர்த்தொடர், இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி, வன்றொடர், மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன். (தொல். 406)
     இதன்கண், மேல் நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீற்றும் வரும் எனக்கூறிய குற்றியலுகரத்துள், நெட்டெழுத்தின் பின் வரும் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி என ஒன்றாகவும், தொடர்மொழியீற்றில் வரும் குற்றுகரத்தை உயிர்த் தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்து வகையாகவும் பகுத்துக் குற்றியலுகரம் வருமிடம் ஆறு என வகைபெறக் கூறியுள்ளமை காணலாம்.

(உ-ம்) நாகு - ஈரெழுத்தொருமொழி

வரகு - உயிர்த்தொடர்
தெள்கு - இடைத்தொடர்
எஃகு - ஆய்தத்தொடர்
கொக்கு - வன்றொடர்
குரங்கு - மென்றொடர்
அவற்றுள்
ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. (தொல்.407)
     மேற்கூறிய ஆறனுள் க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகி வரும் குற்றியலுகர வீற்றுச்சொற்கள் ஒருவாற்றான் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் அவற்றிற்கு முன்னே