இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
தொல்காப்பியம்-நன்னூல்
இஃது அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியினும் உளவாம் செய்கை கூறுகிறது.
(இ-ள்) அத்தும் வற்றுமாகிய அவ்விரு மொழிமேல் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது. அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று.
(உ-ம்) கலம் + அத்து + குறை = கலத்துக்குறை எனவும் அவ்+வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவும் வரும். புள்ளியீறல்வழி விகார வகையால் நின்றனவும் வற்றின்மிசை யொற்றென்று கெடுக்கப்படும். அவை வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவரும், அத்துச் சாரியையும் வற்றுச் சாரியையும் பெற்று வரும் மகர வகர ஈறுகளுக்கு உயிரீறு போன்று சற்று வல்லெழுத்து மிகுதி இல்லாமையால், அச்சாரியைகளின் பின் வல்லெழுத்து விதிக்கப்பட்டது. வல்லெழுத்து மிகாது திரிந்து முடிவன ணகர னகர லகர, ளகர ஈறுகளாம். அதவத்துக்கண், விளவத்துக் கண் என அத்தின் அகரங்கெடாது நிற்றல் ‘தெற்றென்றற்று’ என்றதனாற் கொள்ளப்படும்.
காரமுங் காமுங் கானொடு சிவணி - நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. (தொல். 134)
(இஃது) எழுத்துச் சாரியைகளாமாறு கூறுகின்றது.
(இ-ள்) காரம், கரம், கான் என்பன எல்லாவாசிரியரானும் உடன்படத்தோன்றும் எழுத்தின் சாரியைகளாம் எறு.
நேரத்தோன்றும் என்றதனால் நேரத்தோன்றாதனவும் உளவென்பது பெற்றாம். அவை ஆனம், ஏனம், ஒனம் என இவையென்பர் நச்சினார்க்கினியர்.
அவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத் திலவே. (தொல். 135)
இஃது அவற்றுட் சிலசாரியை சில எழுத்தொடு வாராவென விலக்குகின்றது.
(இ-ள்) மேற்சொல்லப்பட்டவற்றுள் கரமும் கானும் ஆகிய சாரியைகள் இரண்டும் நெட்டெழுத்திற்கு வாரா எறு எனவே காரச் சாரியை நெட்டெழுத்திற்குண்டென்பதாம்.
(உ-ம்) ஆகாரம், ஈகாரம், எனவரும்.
வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. (தொல், 136) இஃது ஐயமகற்றுகின்றது.