52
நாளடைவில் தணிந்தது. நீரினால் குளிர்ச்சியடைந்த பூமியின் மேற்பரப்பு, மழை நீரைத் தன்னுள் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் துவங்கியபோது பூமி குளிரத் துவங்கியது.
பூமியை மூடியிருந்த நீராவியின் பெரும்பகுதி குளிர்ந்து, பூமியின் மேலேயே நீராகத் தங்கியது. பின் அதுவே பெருங்கடலாக உருப்பெற்றது. ஆயினும்-
பூமி தன்னுள்ளே குளிராமல் எரிமலையாக இன்னும் உள்ளே குமைந்து கொண்டு தானிருக்கிறது. ஆயினும், புறத்தே அதன் வெப்பம் தணிந்து, நீராலும், நிலத்தாலும் சூழப்பட்டு அமைதி பெற்ற போது, கதிரவன் தன் பொன்னிறக் கிரணங்களை பூமியின் மீது வாரி இறைத்தான். எங்கும் ஒளி வெள்ளமாகக் காட்சியளித்தது.
அதுதான் பூமி அன்னை கண்ட முதல் பகல் பொழுது. பின்னர் பூமியின் சுழற்சியில்-சூரியனது பவனியில்-பகல் போயிற்று-இரவு வந்தது. இப்படிப் பகலும், இரவும் பூமிக்குப் பரிச்சியமாயிற்று.
பகற்பொழுதில் பூமியின் மீது கதிரவனின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கதிரவன் தனது வெப்பத்தால் பூமியின் மேற்பரப்பில் நீண்டு கிடந்த கடல் நீரை ஆவியாக மாற்றி, வானத்திற்கு அனுப்பி வைத்தான்.