பக்கம்:எனது நண்பர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144  எனது நண்பர்கள்

அனுப்பிவிட்டு, தான் குளிப்பதற்காக எண்ணெயையும் துண்டையும் எடுத்துவர வேலையாளையும் அனுப்பிவிட்டு, அருவியை நோக்கித் திருவாசகத்தைப் பாடியபடி நடந்து கொண்டிருந்தார். ஐம்பதடி தூரம் நடந்ததும் கையை ஊன்றி உட்கார்ந்தார். தலை சாய்ந்தது. உடனே எல்லோரும் சேர்ந்து அவர்களை ஒரு துப்பட்டியில் கிடத்தித் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி மருத்துவருக்கும் செய்தி அனுப்பி, மருத்துவரும் உடனே வந்துசேர்ந்தார். இவை அனைத்தும் செய்து முடிய ஏழு நிமிடங்களே பிடித்தன. மருத்துவர் அவரைப் பரிசோதித்து உயிர் பிரிந்து ஏழு நிமிடங்கள் ஆயின. எனக் கூறிவிட்டார். எல்லோரும் கதறி அழுதோம். அவரது பொன்னுடலுக்கு முதல் மாலையிடும் நிலை எனக்கு நேரிட்டது. பல இடங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் பறந்தன. மகன் கண்ணனையும் இராஜபாளையத்திற்குச் செய்தி அனுப்பி வழிமறித்துத் திருப்பி அழைத்துக் கொண்டோம். கார்கள் பலவந்தன. அவரது பொன்னுடலுடன் நானும், ராதா அம்மையாருடன் என் மனைவியுமாக அழுது கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம். மீனாட்சி ஆலையின் உள்ளும் புறமும், அவரது இல்லத்தின் உள்ளேயும் வெளியிலும், வீதியின் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கடல் அலைகள் போன்று பெருகி நின்று கதறி அழுது கொண்டிருந்த காட்சி எங்கள் துன்பத்தை மேலும் வளரச்செய்தது. பொன்னுடலைக் காணவந்த மக்கள் கூட்டம் வைகையில் கூடும் அழகர் திருவிழாக் கூட்டத்தையும் மிஞ்சியிருந்தது.

நினைவுச் சின்னம்

அவரது உடல் எரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரது மாளிகையின் பின் புறத்திலேயே அடக்கம் செய்து, நினைவு சின்னம் ஒன்று அங்கு எழுப்ப வேண்டுமென்று எண்ணினேன். அதற்காகப் பெரிதும் முயன்றேன். தோல்வியையே அடைந்தேன்.