உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நா. வானமாமலை

லாளிகளோடு சேர்ந்து முதலாளியின் கட்டளையை மீறிக் கடற்கரைக்கு மீன் பிடிக்கப் போகிறான். அவனையும் போராடும் தொழிலாளரையும் அடக்கத் தொழிலாளர் சிலரையே அடியாட்களாக முதலாளி கொண்டு வருகிறார். தொழிலாளிகளிடையே போராடுவது பற்றி ஐயங்கள் உள்ளன. கருங்காலிகள் தொழிலாளரை வெட்ட முயலும்போது, உணர்ச்சிமிக்க தொழிலாளிகள் ஒன்றுகூடி எதிர்க்கின்றனர். தொழிலாளி வர்க்க ஒற்றுமை இவ்வாறு தோன்றுகிறது. சுரண்டலை உணர்ந்து, அதனை உதறியெறிய முற்படும் தொழிலாளர் தாங்கள் ஒரு வர்க்கம், முதலாளி சுரண்டும் வேறு வர்க்கம் என்னும் உண்மையை அறிகிறார்கள்.

முன்பு காணப்படாத ஒரு புதிய புரட்சித் தீ எப்படித் தோன்றிப் பரவுகிறது என்று இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. வர்க்க உணர்வு சில தொழிலாளிகளிடம் சுடர்விட்டுப் பின்பு எப்படித் தீயாகப் பரவுகிறது என்பது காட்டப்பட்டுள்ளது.

மனிதனது குணாம்ச மாறுதல் ஒன்றை இக்கதை சித்திரிக்கிறது. அடிமைத்தனத்தில் உழலும் தொழிலாளி, அன்பு காரணமாக, வாழ்க்கை உவப்பு காரணமாக, சுரண்டுகிற முதலாளிக்கு உழைக்க மறுக்கிறான். அதே உணர்வுடைய தொழிலாளிகள் ஆதரிக்கிறார்கள். பலர் முதலாளியின் பண பலம், ஆள் பலம், சட்டம், ஒழுங்கு இவற்றிற்குப் பயந்து 'நமக்கென்ன வந்தது?' என்ற உணர்வில் செயலற்றிருக்கின்றனர். தொழிலாளியின் பிழைப்புக்கு ஒரே வழியான மீன் பிடித்தலை முதலாளி தடுக்கும் பொழுது, அனைவரும் ஒன்று சேருகின்றனர். வர்க்க உணர்வு ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. வர்க்கப் போராட்டம் வெளிப்படையாகத் தோன்றுகிறது.

இங்கு முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற தன்மை விமர்சிக்கப்படுகிறது. தொழிலாளி, முதலாளியின் லாபத்தைப் பெருக்கும் ஒரு கருவி என்ற மனப்பான்மை முதலாளிக்கு இருக்கிறது. அவரே மீன்பிடி குத்தகை எடுத்துக் கடற்கரை தன்னுடையது என்ற இறுமாப்பில் இருக்கிறார். கடற்கரையில் இறங்கவிடுமால் தடுத்தால், தொழிலாளி பட்டினி கிடந்து பின்னர் பணிவான் என்று முதலாளி எதிர்பார்க்கிறார், பிழைப்புப் போய்விடும் என்ற நினைப்பு வர்க்க உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் தோற்றுவிக்கிறது. முதலில் ஒன்றிருவர்தான் அடிமை மனப்பான்மையை உதறியெறிந்து போராட முன்வருகிறார்கள். அவர்கள்தான் வீரர்கள். அவர்கள் வீரம், தொழிலாளிகளிடையே பரவுகிறது. நீண்ட நெடிய வர்க்கப் போராட்டம் உதயமாகிவிட்டது. இப்பொழுது அனைவரும் வீரர்கள்தானே!