4
கம்பன் சுயசரிதம்
அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள். அவர்கள் தலைமையின் கீழ் ஒரு கம்பன் திருக் கூட்டமே தென் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. கம்பனுக்கு முதன்முதலாக ‘திருநாள்’ கொண்டாடிய பெருமை திருநெல்வேலிக்கே உரியது. பின்னர், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் காரைக்குடியில் கம்பன் கழகத்தை நிறுவி, ஆண்டுதோறும் நான்கு நாட்கள் திருவிழா கொண்டாடி வந்தார்கள். ‘கம்பன் அடிப்பொடி’ என்று பவ்யமாகப் பெயர் சூடிக் கொண்டாலும், கவிச் சக்கரவர்த்தி கம்பனுடைய தானைத் தளபதி அவர்கள்தான். கம்பன் அடியார்கள் அத்தனை பேரையும், கம்பன் பெயரைச் சொல்ல, கட்டி இழுத்து வந்து காரைக்குடி கம்பன் விழா மேடையில் ஏற்றிவிடுவார்கள். ரசிகமணி டிகேசி, குன்றக்குடி அடிகளார், பாஸ்கரத் தொண்டைமான், ஜஸ்டிஸ் மகாராஜன், பேராசிரியர் சீனிவாசராகவன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., அ.ஞானசம்பந்தன், கம்பராமன், தோழர் ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று கம்பன் அடியார் கூட்டமே வந்து குவிந்துவிடும். நானும் என் திருமணத்துக்குப் பின், ஏறத்தாழ இருபது ஆண்டுகள், அந்தக் கம்பன் விழா மேடை ஏறியிருக்கிறேன். என் கணவரும் ஏறி இருக்கிறார். கிடைத்தற்கரிய பேறு அது. இன்றும் காரைக்குடியில் கம்பன் விழா தொடர்ந்து நடைபெறுகிறது. காரைக்குடியில் மட்டுமல்ல, கோவையிலும், பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் அதன் கிளைகளாகக் கம்பன் விழாக்கள் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, கம்பன் எப்படி தமிழ் அறிஞரைக் கவர்ந்திருக்கிறான், கவிச்சக்கரவர்த்தியாகத் தமிழ் நெஞ்சங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறான் என்று நாம் அறிய முடிகிறது.
காரைக்குடி கம்பன் விழாக்களின் போது ஆண்டுதோறும் மலர் வெளியீடும் நடந்தது. அந்த மலர்களில் எல்லாம் என்