தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
85
வழி வழியாகச் சைவப் பெருங்குடியில் வந்த கம்பனது முன்னோர்களுக்கு கச்சி ஏகம்பனே வழிபடு தெய்வமாக இருந்திருக்கிறான். ஆதலால் ஏகம்பன் பெயரையே அவன் தந்தை அவனுக்குச் சூட்டியிருக்கிறார். அதனால்தான் கம்பன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. தக்க புகழையுமே பெற்றிருக்கிறது. இந்தக் கம்பன், தொண்டை நாடு சென்று கச்சி ஏகம்பனைக் கண்டு தொழுதுவிட்டு, தன் சொந்த ஊராகிய தேரழுந்தூருக்குத் திரும்பி வருகிறான். வருகிற வழியில் ஒரு ஊர். அந்த ஊரில் கோயில் கொண்டிருப்பவர் கோதண்டராமர் என்று அறிந்தபோது கோயிலுள் சென்று தன்னை ஆட்கொண்ட பெருமானான ராமனை வணங்கித் துதிக்க நினைத்திருக்கிறான். அவசரமாக ஊர் திரும்புகின்ற பயணம். ஆதலால், கடைகளில் நுழைந்து ஆராதனைக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளவோ நேரமில்லை. ஆதலால் கையை வீசியே நடக்கிறான்; கோயிலுள் நுழைகின்றான்; நேரே கர்ப்பக் கிரஹத்திற்கே வந்து விடுகிறான். அங்கு சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கும் கோதண்டராமனை, அவன் ஆராதித்த கருணாகரனை எல்லாம் கண்குளிரக் காணுகின்றான். அல்லையாண்டு அமைந்த மேனி அழகனை, அந்த அழகனது அழகை எல்லாம் எத்தனையோ பாடல்களில் ராமகதை முழுவதும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவன் ஆயிற்றே. என்றாலும் செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும் சந்தார் தடந்தாளோடும் தாழ் தடக்கைகளோடும் வில்லேந்தி நிற்கும் அந்த ராமனைக் கண்டபொழுது, தான் சொல்ல வேண்டுவது இன்னும் எவ்வளவோ இருக்கிறதுபோல இருக்கிறதே என்ற எண்ணம். இப்படித் தன் எண்ணங்களை அலைபாய விட்டு அப்படியே மெய்மறந்து நின்றிருக்கிறான். மேலே கிடந்த உத்தரீயத்தை எடுத்துப் பவ்வியமாக அரையில் கட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை. மூர்த்தியைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. இந்த நிலையில் நிற்கும் கம்பனைப்