பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

137

பார்த்திருக்கிறீர்கள். ஐயோ 627 செய்யுள்கள் போய்விட்டதே என்று வருத்தப்படவில்லை, கையை நெரிக்கவில்லை. என்னுடைய கிராமத்தில் (தென்காசியில்) நல்ல நீர்வளம் உள்ள புஞ்சை ஒன்று, ஒரு அடிக்குக் கீழ் தண்ணீர். அதில் பூர்வமாக வளர்ந்த பனைகள் காடாய் நின்றன. பிறகு பனைகளுக்கு இடையில் தென்னங்கன்றுகளை வைத்தார்கள். சரியான முறையிலே முப்பது அடிக்கு ஒன்றாய் வளர்த்தார்கள். தென்னைகள் உண்டாய்விட்டன. தென்னை வைத்து இருபது வருஷம் ஆய்விட்டது, காய்ப்பே இல்லை. நான் முதன்முதலாகப் போய்ப் பார்த்தபோது இப்படி இருந்தது. சரி, இதற்குப் பனைகளையெல்லாம் வெட்ட வேண்டியதுதான் என்றேன். கணக்குப் பிள்ளை காவல்காரர் எல்லோரும் ஆதிகாலத்துப் பனையை வெட்டலாமா என்று ஆட்சேபித்தார்கள். தென்னைகளைக் காய்க்க விடாமல் அவைகள் செய்து கொண்டு நிற்கலாமா என்று கேட்டு உடனே பனை வெட்டுக்காரனுக்கு அச்சாரம் கொடுத்துவிட்டேன். ஒரு வாரத்தில் பனைகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதுமுதல் தென்னை மரங்கள் வீரியமாய் வளர ஆரம்பித்தன. சுற்று வட்டகையில் அவ்வளவு வளமான தோப்பும் இல்லை, காய்ப்பும் இல்லைதான். களையாய் இருக்கிறவைகளைக் களைந்தெறிந்தாய் விட்டது என்று சந்தோஷப்பட வேண்டியதுதானே. மிஞ்சிய 584 கவிகளும் வாடாத கற்பகத் தருக்கள் அல்லவா? என்றும் வாசனைதான். இதயத்தைப் போஷிப்பதுதான்.”

ஒருநாள் டிகேசி அவர்களுடன் நாங்கள் இரண்டு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு கட்டத்தை விளக்கினார்கள் வழக்கம்போல, ராமன் காட்டுக்குப் புறப்படுகிறான், சுமித்திரையிடம் சென்று விடைபெறகிறான். சுமித்திரை இலக்குவனையும், ராமனுடன் போக அனுமதிக்கிறாள், இல்லை போகச் சொல்லி உத்திரவே