பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.

இவ் அடிப்படையில் தமிழரது சமூக மாறுதல்களைக் கவனிப்போம்.

தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர். வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர் எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் தினையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும் பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.

இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும். மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை

4