பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டிக் கூத்தாடினர். மால் பசு நிலைகளைப் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் கயிறும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் ‘சல்லிக் கட்டு’ என்று இன்று அழைக்கப்படும் ‘கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப் பெறும். பாணர், பாணியர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.

நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும். தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று.


5