பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்கு கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன. பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.

இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று. எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.

தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி,

6