2
இட்ட அடிவேகும்! ஓட்டும் பொடிகாலில்!
பட்ட செடிகொடிகள், மொட்டை மரங்களெல்லாம்
வேகாது வெந்து வெறிச்சென் றிருந்திடுமோ
மண்ணெழுப்பும் கானல்! வருங்காற்றுத் தீச்சொரியும்!
கண்ணுக்குத் தோன்றாத புண்ணாய் உடல் கொதிக்கும்!
சிற்றூரும் பேரூரும் தீய்த்த முதுவேனில்
அற்றொழிந்தும் மக்கள் துயரற் றொழியவில்லை!
வானம் குமுறும்! வளர்ந்தமலைக் கூட்டம்போல்,
ஏனம் வெறிகொண் டெழுதல்போல், யானை
தலைதெறிக்க ஓடும் தகைமை போல் கார்வானில்
அங்குமிங்கும் ஓடும்; அதிரும்; முழவார்க்கும்!
சிங்கத் தமிழர் செருக்களத் தோசையென
வானம் இடிக்கும்; மழைபொழியும்! நீள்மூசைத்
தங்க உருக்குபாய் தாரைகளைப் போல்மின்னல்
கண்ணைப் பறிக்கும்! கருத்தழிக்கும் காற்றிரைச்சல்!
நீண்டபனை தென்னை நிலைகால் தெரியாமல்
மூண்டெழுந்த காற்றுடனே ஆடும்; மூரிந்தொடியும்!
கொட்டகையில் மாடுகன்று; கூண்டில் பறவையினம்
கட்டுண்டு மங்கிக் கலங்கும் பசியால்!
வெளிச்செல்ல வொண்ணா! வினை செய்ய வொண்ணா!
ஒளியற்று மக்கள் ஓடுங்கிக் கிடந்திடுவர்!
தீமை விளைத் தகார் சென்றதுவாம்! ஆனாலும்,
வெள்ளக் கொடுமை வெளிச்சொல்லக் கூடுவதோ?
பள்ள வயல் நினைவால் பாழை மறந்தோமே!
ஏரோசை கேட்டுமானத் தின்டம் பிறந்ததடி!
நீர்வயலில் பாய்ந்தோட நெஞ்சம் குளிர்ந்ததடி!
பச்சைக் கடல்போல் பரந்த வயல்வெளியில்