உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

வளர்த்தோம்; மகிழ்ந்தோம்! வயலில் பசுநெல்
கிளைப்பசும் பாம்பாய்க் கிளைத்து வளர்ந்தது!
கூதிர் அகலச் சிறுகுறை தோன்றியதே!

தோப்பும் துரவும் விழிப்புலனுக் கெட்டாது
காப்புத் திரையிட்டு வைத்ததுபோல் மூடுபனி!
மண்ணுக் கடியில் வளர்தீ இருப்பதைப்போல்
கண்ணுக்கு நீண்டமட்டும் காணும் பனிப்புகையே!
ஊதை உடல் நடுக்கும்! ஊரெல்லாம் தீக்காயும்!
கொம்புத் துளிர்கருதம்! கொத்தெல்லாம் சீரரும்பும்!
செம்பொற் சிறுகிண்ணம் போற்பூக்கும் பூசனிப்பூ
ஆமைத் தலைபோல் அழகுச் சிறுகாயை
நாமடைய விட்டுவைக்கும் நற்பறங்கி! வீட்டோரத்
தோட்டத்து வேலியிலே தொங்கும் சுரைக்காய்கள்
மீட்டாது மாட்டிவைத்த மெல்யாழாம்! தென்னைமரக்
குட்டை நிறைந்த குளிரல்லித் தாமரை நீர்
மட்டத்தில் வந்து மலர் பூக்க எத்தனிக்கும்!
செந்நெல் பழுத்ததுவே! தீம்பலா முற்றியது!
கன்னலோ நாணற் கடல் போலப் பூத்ததுவாம்!
காட்டுப்பூனைப்பல்லாம் கார்முல்லை நீளரும்பு
வீட்டுக் கருகிருந்து மெல்லச் சிரித்தழைக்கும்!
யாழ்மீட்டும் தேன்வண்டு! யாரதைப்போல் பாடவல்லார்?
வாட்டும் குளிர்காற்று வாய்க்கடையில் புண்செய்து
காட்டும் பனி நாள் கடந்துவந்த தைக்கண்டோம்!

தைகண்டோம் அன்பே! தமிழ்கண்டோம்! இந்நன்மை
வையத்துப் புத்தாண்டின் முன்னாள் வரக்கண்டோம்!
பொன்னொளியை வான் கடல்மேல் பூசிச் சிரித்தகதிர்
இன்னே வரக்கண்டோம்! இன்பம் வரக்கண்டோம்

வாழ்க இளம்பரிதி! புத்தாண்டு வாழியவே!