154
இராவணனின் சிறப்பு
(வெண்கலிப்பா)
பொன்விளையும் நன்செய் புனவ்விளையும் நீளாறு
மின்விளையும் கார்வானம் மிக்க தமிழகத்தின்
தெற்கே கடல்சூழ்ந்த சீரார் இலங்கையினை
உற்றே அரசாண்டான் ஒப்பில் தமிழ்மன்னன்;
வீரத் தமிழ்மறவன்; விறல்வேந்தன்; தன்மானச்
சூரன்; குடிபழி தூற்றாத செங்கோலன்;
தார்வேந்தன்; மக்கள் தம் நலமே தன்னலமாய்ப்
பாராண்டு வந்த பழந்தமிழன்; நம்முன்னோன்;
தென்னிலங்கைக் கோமான்; சீர்த்தி நனிமிகுக்கும்
மன்னன் இராவணன்; வற்றா வளமுடையோன்;
எண்ணும் எழுத்தும் இலக்கியமும் இலக்கணமும்
பண்ணும் முறையே பயின்றநற் பாவலனாம்!
பூத்திருக்கும் பொய்கை புதரில் மலராடி
வாய்த்திருக்கும் தேன்மாந்தி வற்றா இசைமிழற்றும்
பொரிவண்டு போலென்றும் புத்தம் புதுப்பாடல்
விரிவாகப் பாடும் மேலோன்; இசைக்கென்றே
தனி ஒரு நூல் தந்தோன்; தமிழ்மறையைக் கற்றோன்;
நனிசீர் ஒழுக்க நலங்கொண்டோன்; நாடாளும்
அறமும் மறமும் ஆன்ற படைவலியும்
உறப்பெற்று நன்னெஞ்சம் உறப்பெற்ற மேலோனாம்!
உள்ளத் துணர்வை உணர்த்தும் மெய்ப் பாட்டசைவால்
உள்ளம் நிலை நிறுத்தும் ஒப்பில்லாக் கூத்தறிந்தோன்;
கண்டு வியக்கக் கூத்தின் கலையறிந்தோன்;
எண்டிசையும் போற்றும் இன்முகத்தான் இராவணனாம்!