உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. இராவணன் விழா

தமிழ்த்தாய் வாழ்த்து
(கலிவிருத்தம்)

வான மேவிய மாக்கதிர் ஞாயிறு
கானல் கக்கிடக் கண்டனம் பூமியை!
ஏனல் நெய்தல் குறிஞ்சிம ருதமும்
ஆன போழ்தினில் ஊனுயிர் ஆனதே!

நீர் நிலம்வளி தீயொடு வானெனும்
சேர்க்கை யின்வழிச் சீர் பெறு நல்லுயிர்
போர்பு ரிந்துமே புத்துணர் வெய்திடும்
ஆர்ப்பில் தோன்றின அஞ்சொல் விளக்கமே!

அந்த நாள் முதல் இந்தநாள் அமைப்பிலும்
பந்தி பந்தியாய் வாழுபல் லூனுயிர்
சிந்து மூச்சொலி செம்மொழிச் சொற்களாய்
வந்து தேங்கி வரிவடி வானதே!

கல்லும் தோன்றிடக் கார்வளி தோன்றிட
அல்லும் தோன்றிட ஆர்கலி தோன்றிடப்
புல்லும் தோன்றிடத் தோன்றிய மண்ணினில்
சொல்லும் தோன்றிடத் தோன்றிய தேதமிழ்!

உந்தி முட்டியே ஊனினம் மூச்செறி
வந்த சொற்களை வாழ்க்கை யறிந்தவர்
சொந்த மொழியெ னச்சொல்லிப் போற்றியே

வந்த னர்மண்ணில் வாழ்ந்திடு மக்களே!