பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

139


‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'பஞ்சாபகேசன், பஞ்சாபகேசன்' ன்னு ஒரு பாங்கர் பட்டணத்திலே உண்டு. அவர் தம் பணத்தை ஒரு கணம் கூடத் தூங்கவிட மாட்டார்; 'தூங்க விட்டால் வட்டியும் தூங்கி விடும்’ என்று சதா அதை எழுப்பி உலாவ விட்டுக் கொண்டே இருப்பார். அதே மாதிரி அவரும் தூங்குவதில்லை; சதா விழித்துக்கொண்டே இருப்பார்.

இப்படியாகத்தானே பணமே தாமாகவும், தாமே பணமாகவும் அவர் இருந்துவருங்காலையில், எங்கிருந்தோ வந்த முகமூடித் திருடர்கள் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் அஞ்சாமல் புகுந்து அயராமல் கொள்ளையடிக்க, அவர்களிடமிருந்து தம்மையும் தம் பணத்தையும் எப்படிக் காத்துக் கொள்வதென்று அவர் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். நகரத்துக்கு வெளியே உள்ள வீடாகப் பார்த்துத்தான் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறிந்த அவர், அடையாற்றிலிருந்த தம் வீட்டை உடனே திருவல்லிக்கேணிக்கு மாற்றினார். கையிலிருந்த ரொக்கம், விலையுயர்ந்த நகைகள் ஆகியவற்றைப் பாங்குகளிடம் ஒப்படைத்தார். பாங்கின் நேரம் கழித்து வந்த பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி, அதன் கதவை ஒரு தடவைக்கு நாலு தடவையாக இழுத்து இழுத்துப் பார்த்தார். எல்லாம் ஒரு வழியாக முடிந்தபின், 'அப்பாடா!’ என்று அவர் ஒரு 'டெகா மீட்டர்' அளவுக்குப் பெருமூச்சு விட்டார்.

அன்று என்னவோ தெரியவில்லை-துக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வருவதுபோல் இருந்தது அவருக்கு; எழுந்து போய் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தார். இடுப்பு வலிப்பதுபோல் இருந்தது; 'விழித்தபடியே கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டுதான் இருப்போமே!’ என்று படுத்தார். மணி 'டாண், டாண்’ என்று பத்து அடித்தது. அதுகாலை, ‘பால் சாப்பிடவில்லையா?' என்று கேட்டுக் கொண்டே அன்னார் 'பட்டமகிஷி' அங்கே வர,