பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வேங்கடம் முதல் குமரி வரை

நாட்கள் (மார்ச்சு 6,7,8) மாலை ஆறு மணி சுமாருக்குக் கோபுரம் வாயில், கொடிமரம், பலிபீடம் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு சூரியன் கோயிலுக்குள் புகுந்து லிங்கத் திரு உருவைச் சோதிமயமாக ஆக்கிவழிபடுகிறான். சூரியன் மாத்திரம் என்ன வேதங்கள், திக்கு பாலகர்கள் எல்லாம் வழிபாடு இயற்றியிருக்கிறார்கள் என்பது புராண வரலாறு. நாமும் வேதபுரி ஈசுவரரை வணங்கிவிட்டு மற்றையப் பரிவாரதேவதைகளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்டவை. 'மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன வீரதேவன்' என்று அவன் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறான். இந்த வட்டாரம், ஜெயங்கொண்ட சோழவள நாட்டுத் திருவழுந்தூர் நாடு என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இத்தலமே திருமாவளவன் கரிகாலனது தாயாரது ஊர் என்றும், இங்கேயே அவன் மறைந்து பல காலம் தங்கியிருந்தான் என்றும் கூறுவர். சரித்திர வரலாறு இவ்வளவு போதும்.

இனி நாம் ஆமருவி அப்பன் சந்நிதிக்குச் செல்லாலாம். வேதபுரி ஈசுவரர் கோயிலிலிருந்து. கண்ணை மூடிக்கொண்டு நேரே மேற்கு நோக்கி நடந்தால் ஆமருவியப்பன் வந்து சேரலாம். ஆனால் கோயில் பக்கம் வருமுன் மூடிய கண்ணைத் திறந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கோயில் முன்னிருக்கும் தர்சன புஷ்கரிணியில் விழுந்து விடவேண்டியதுதான். இந்தப் புஷ்கரிணியைச் சுற்றிக் கொண்டு வந்தால் ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சேருவோம். கோயிலில் நுழைந்த உடனேயே ராஜகோபுரத்தின் உள்பக்கம் தென்பக்கத்திலே இரண்டு மாடங்கள் இருக்கும். அந்த மாடத்தில் இருப்பவர்கள் 'கம்பர்களும் அவர் மனைவிகளும்' என்பார்கள், 'இது என்ன கம்பர்கள்?' என்று