பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

87

தமிழ்தானா? என் இனம் தமிழ் இனம்தானா? என் அகம் தமிழ் அகம்தானா?' என நம்பியாகப்பட்டவன் அவற்றை நினைவுகூர்ந்து அக்கணமே அமைதியுறுவானாயினன்.

ஆனால் அந்த அமைதியாகப்பட்டது அப்படியே நீடித்ததா என்றால், அதுதான் இல்லை. ஒரு நாள் நம்பியாகப் பட்டவன் வழக்கம்போல் தூங்காமல் அப்படியும் இப்படியுமாகத் தன் அறையிலேயே பின்னால் கையைக் கட்டியபடி ஏறு நடை போட்டுக் கொண்டிருக்க, அவன் மனைவி சுடர்க்கொடி யாகப்பட்டவள், ‘ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்க, ‘நான் தூங்கினால் இந்தி அரக்கி வந்து தமிழை அழித்துவிடுவாள்; அதனால்தான் தூங்காமல் இருக்கிறேன்!’ என்று அவன் சொல்ல, அவள் சந்தேகக் கண் கொண்டு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கென்ன, பைத்தியமா பிடித்திருக்கிறது? இந்தி அரக்கியாவது, வந்து தமிழை அழிப்பதாவது? ஆங்கில அரக்கன் வந்து அத்தனை வருஷங்கள் இருந்தானே, அவனால் தமிழ் அழிந்தா விட்டது? பேசுவதற்கு விஷயம் வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் அவ்வப்போது ஏதாவது ஒரு 'சீசன் பிரச்னை'யைக் கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். அது அவர்கள் தொழில். அந்த இழவெல்லாம் குடும்பம், குழந்தை என்று இருக்கும் உங்களுக்கு ஏன்? பேசாமல் தூங்குங்கள்!' என்று சொல்ல, ‘உனக்குத் தெரியாது, சுடர்க்கொடி! இந்தி அரக்கி இப்போது நம் வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறாள்; அவளை விரட்டும் வரை நான் தூங்கேன், தூங்கேன், தூங்கேன்!' என்று அவன் மீண்டும் ஒரு முறைக்கு மும்முறையாக முழங்க, ‘இதென்ன சோதனை? இவர் எதைப் பார்த்துவிட்டு இப்படிச் சொல்கிறாரோ, என்னவோ? எதற்கும் வாசலையாவது போய்ப் பார்த்துவிட்டு வருவோம்!’ என்று அவள் வாசலுக்கு ஓட, அந்த நேரத்தில் ஏதோ காரியமாக அந்த