42
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
என்று கூறியதைக் கொண்டு உணரலாம். சிந்தாமணி, மணிமேகலை முதலிய காவியங்கள் இம்முறைபற்றியே செய்யப் பெற்றவை.[1]
மக்கள், துன்புறும் இவ்வுலக வாழ்க்கையைக் கண்டு கண்டு இன்பம் காணும் முறையில் ஈடுபடுதலும் இலக்கியத் தோற்றத்திற்கு ஒரு காரணமாகும். இதனால்தான், ‘இல்லது-இனியது நல்லது புனைந்துரை’ எனப் புலவரால் நாட்டப்பெற்ற ஒழுக்கம் நான்கெனச் சான்றோர் கூறியுள்ளனர். கோவை, கலம்பகம் போன்ற புனைந்துரை நூல்கள் இம்முறைபற்றி எழுந்தனவேயாகும்.[2]
“உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்து வதற்கும், அதைச் செம்மைப்படுத்தற்கும், புரிந்துகொண்டு படிப்பதைச் செரிப்பதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாக்கற்கும், நல்லவற்றை மேற்கொள்வதற்கும், பிறர்க்கு எடுத்துரைப்பதற்கும். பிறரை நல்வழிப்படுத்தற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும். இந்நிலை யிற்றான் அஃது இலக்கியம் எனப்படும்,” என்பது கார்டினல் நியூமன் என்பவர் கருத்தாகும்.[3]
இவ்வாறு இலக்கியம் பல காரணங்களைக் கொண்டு தோன்றுகிறது. இவற்றுள் ஒழுங்கு, வரையறை, அழகு, பயன் ஆகியவை நிறைந்துள்ள இலக்கிய நூல்களே படிப்போர்க்கு இன்ப உணர்ச்சியை உண்டாக்கும்.[4] அவையே ஒரு சமுதாயத்தின் அழியாத செல்வங்களாகும். நம் தமிழ் நூல்களுட் பல இத்தகைய அழியாத செல்வங்களாகும். அவற்றுள் தலை சிறந்தவை சங்க நூல்கள்.