பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சங்ககாலத் தமிழ் மக்கள்


கேட்கின்றாய். அவன் எவ்விடத்திருந்தாலும் அவனை அறியேன். புலி தங்கியிருந்து வெளியே சென்ற குகையினைப் போல, அவனைப் பெற்ற வயிறோ, இதுவாகும். அவன் போர்க்களத்தின்கண்ணே வெற்றியாற் பொலிவு பெற்றுத் தோன்றுவான். அங்கே போய்ப் பார்ப்பாயாக,”(புறம்.36) எனக் கூறியனுப்புகின்றாள். 'புலியிருந்து போனமையால் வெறுவிதாகிய குகைக்கும் வெளிச்சென்ற புலிக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமைபோல, எனக்கும் என் வயிற்றிற் பிறந்த மகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.' எனத் காவற்பெண்டு, அறிவுறுத்தினமை ஆடவர்களது வீர வாழ்க்கையின் இயல்பினை இனிது விளக்குவதாம்.

ஒரு நாளிலே எட்டுத் தேர்களைச் செய்ய வல்ல தச்சனொருவன் ஒரு மாதம் முயன்று செய்த தேர்க்கால், விரைவும் திண்மையும் உடையதாதல்போலப் போர்த் தொழிலில் விரைவும் திண்மையும் உடைய வீரர் பலர் இத்தமிழகத்திலே வாழ்ந்தனர். திடீரெனப் போர் ஏற்படும்பொழுது ஊர்மக்கள் எல்லாரையும் முரசறைந்து அழைத்தற்காக ஊர் மன்றத்திலே முரசு தொங்கவிடப்பட்டிருத்தல் மரபு. அம்முரசு பிறரால் அடிக்கப்படாது பெருங்காற்றின் மோதுதலால் அதன்கண் சிறிய ஒசை தோன்றுமானாலும், அதனைக் கேட்டுப் போர்ப்பறையென்று கருதிப் போருக்குப் புறப்படும் விரைவு உணர்ச்சி தமிழ் வீரர்கள்பால் விளங்கியது. 'ஏறு தழுவுதல்' என்னும் முறை அக்கால ஆண்மக்களது உடல் வலியையும் உள்ளத்திண்மையையும் நன்கு விளக்குவதாகும். இங்ஙனம் செய்தற்கரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்ற ஆடவர், தம்மை அன்பினால் காதலித்த உளமொத்த மங்கையரையே