பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

79


மணந்து கொண்டனர். தம்மை விரும்பாத மகளிரைக் கூடுதல் தம்முடைய ஆண்மைத் தன்மைக்கு இழுக்காகுமென்பது அவர்தம் கருத்து. தனது உடல் வன்மையொன்றனையே பற்றுக்கோடாகக் கொண்டு மெல்லியலாராகிய பெண்டிரது உள்ளத்து உணர்ச்சியினை மதியாது உணர்வு கடந்து ஒழுகுபவன் ஆடவர்க்குரிய உரன் என்னும் திண்ணிய அறிவினைப் பெறாதவன் என இகழப்படுவான். விரும்பாத மகளிரை விரும்பி நிற்பவன் உரனில்லாதவன் என எல்லாராலும் இகழப்படுதல் உறுதி. “என்னை இகழ்ந்த அறிவில்லாதவனை யானையின் காலில் அகப்பட்ட மூங்கில் முளையைப்போல வருந்தப் பொருதிலேனாயின், தீதிலாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத மகளிரது புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக!” எனச் சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுகின்றான். விருப்பமில்லாத மகளிரைக் கூடுதலை நல்லாண்மைமிக்க ஆடவர் அருவருப்பாகக் கருதுவர் என்பது மேற்கூறிய நலங்கிள்ளியின் வஞ்சினத்தால் நன்கு புலனாம்.

தன்னை அன்பினால் காதலித்த மெல்லியலாளாகிய மகளிடத்து அவளைக்காட்டிலும் மென்மையாளனாய்ப் பணிந்தொழுகுதலும், வீரத்தின் வன்மையால் தன்னையொத்த ஆடவர்களிடத்தில் அவர்களைக் காட்டிலும் பேராண்மை படைத்தவனாய் நின்று அவர்களை அடக்கி ஆளுதலும் நல்லாண்மை மிக்க வீரனுக்குரிய பண்புகளாகப் பண்டைத் தமிழர்கள் விளக்கியுள்ளார்கள். ஆடவர் தமக்கொத்த அன்புடைய மகளிரை நாடித் திருமணம் செய்துகொண்ட பின்னர், மனையில் இருந்து இல்லறம் நிகழ்த்தும் உரிமையினை வாழ்க்கைத் துணைவியராகிய மனைவியர்க்கு வழங்கினர்.