பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


நூலில் இடம்பெற்று நிற்கின்றனர். சாதாரண மக்கள் வாழ்க்கை முறையும், உயர்ந்த அரசர் வாழ்க்கை முறையும் இதில் பேசப்படுகின்றன. அந்தணர், வணிகர், வேளாளர் போன்ற பல்வேறு குடிப்பிறப்பாளர்களும் அவர் தம் பாடல் தலைவர்களாய் வருகின்றனர். எனவே, ஏறக்குறையத் தமிழ் நாட்டார் வாழ்க்கை முறையைச் சிந்திரிக்கும் வகையில் இப்பெரிய புராணம் செல்கிறது என்பர் அறிஞர். மேலும், கடவுள் நெறியென்றால் துறவுதான் என்பாரை மறுத்துப் பல இல்லறத்தவரை நன்கு பாராட்டிப் போற்றியுள்ளார் சேக்கிழார். காதல் வாழ்வில் திளைத்த அடியவர் வாழ்வைக் கூறும்போது. இவர் ஓர் அகப்பொருட் கவிஞராகவே மாறிவிடுகின்றார் என்னலாம். சுந்தரர் இருவரை மணந்து வாழ்ந்த இன்ப வாழ்வை எண்ணும்போது, வள்ளுவரது காமத்துப்பால் இவர் உள்ளத்து எழுகின்றது. ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள,’ என்ற வள்ளுவர் வாக்கை அப்படியே எடுத்து ஆள்கின்றார். சுந்தரர், பரவையார், சங்கிலியார் இருவருடன் கலந்து காதல் வாழ்வு வாழ்ந்தவர். பரவையாருடன் திருவாரூரிலும், சங்கிலியாருடன் ஒற்றியூரிலும் அவர் வாழ்ந்த வாழ்வை விளக்கு முகத்தால் சேக்கிழார் காதல் வாழ்வையே சித்தரித்துவிடுகின்றார்.

‘பண்டு நிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்துற்று அமர்ந்திருந்தார்
                                                           காதலினால்.’ (ஏயர். 267)

என்று ஆரூரின் காதல் வாழ்வினையும்,

‘மருவிய இன்ப வெள்ளத் தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப

ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர்ஒன் றானார்.’

(ஏயர். 381)

என்று ஒற்றியூரின் காதல் வாழ்வினையும் காட்டும் நெறியினைப் பயில்வார், அவற்றின் சிறப்புக்களை அறியாதிருப்-