5
முதலாளி என்று ஒருவர் இருக்கிறார். மற்றையோர்கள் அவரைச் சார்ந்தவர்களே. அதுபோல எழுத்துக்களிலும் முதன்மையான எழுத்துக்கள் உண்டு. அம் முதன்மையான எழுத்துக்களைச் சார்ந்த எழுத்துக்களும் உண்டு. முதன்மையான எழுத்துக்கள் முதல் எழுத்து என்று பெயர் பெறும். அதைச் சார்ந்த எழுத்துக்கள் சார்பெழுத்து என்று பெயர் பெறும்.
"எழுத்துக்கள் முதல்எழுத்து என்றும் சார்பு எழுத்து என்றும் இருவகைப் படும்."
5. உயிர், மெய்.
முதன் முதலில் முதலாளியை எடுத்துக் கொள்வோம். அவர் உடல் இல்லா விட்டால் அவை உருவத்தை அங்கு நாம் பார்க்க முடியாது. அவரது உடலே அவ்வாறு இயங்கும்படிச் செய்வது உயிர். ஆகவே முதலாளி என்பவர் உயிரும் உடலும் சேர்ந்தவரே ஆவார். அது போல எழுத்தும் உயிர் எழுத்து என்றும், மெய் யெழுத்து என்றும் இரு வகையாக உள்ளன.
உயிர் எழுத்து:-
உயிர் தானே தனித்து இயங்கும். அது இயங்குவதற்கு வேறு ஒன்றின் உதவியை நாடாது. மேலும் அது உடலையும் இயங்கச் செய்யும். அது போலவே உயிர் எழுத்தும் தான் இயங்குவதற்கு வேறு ஒர் எழுத்தின் உதவியை நாடாது. அது தானே தனித்து இயங்கும். மெய் எழுத்தையும் இயங்கும்படி செய்யும்.