பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நெஞ்சக்கனல்


நிரம்பியிருக்கிறார்களே ஒழிய எந்த ஒன்றிலும் ஆழ்ந்த இரசனை உள்ளவர்களை எங்குமே காணமுடியாமலிருக்கிறது. புதியஇந்தியாவுக்கு இன்று இதுவும்ஒருகுறைதான். தன் நாட்டுக் கலைகளில் நம்பிக்கையில்லை. அந்நிய நாட்டுக்கலைகள் சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டும் தெரிந்தது போல் நடிக்கும் போலித்தன்மையோ எங்கும் உண்டு.

கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டு இரண்டு விநாடி யோசனைக்குப்பின், “இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கப் போகலாம் என்று நினைக்கிறேன். ‘செக்’கை அனுப்பும்போது என் சம்மதத்தையும் தெரிவித்துக் கடிதம் எழுதிவிடு” என்று கமலக்கண்ணன் பதில் கூறியபோது ரோஸிக்குத் தன் செவிகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அவர் தானா என்று சந்தேகமாயிருந்தது.

“சார்! அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கம் இருக்கிற இடம் இங்கிருந்து எழுபது எண்பது மைலுக்கு அப்பால் திண்டிவனம் பேர்கிற வழியில் ஏதோ ஒரு குக்கிராமம். அங்கே இங்கிலீஷில் பேசினால் புரியாது. கூட்டமும் வராது. ‘மைக்’ கூட ஏற்பாடு செய்வது சந்தேகம். அதனால்தான் பார்க்கிறேன்...”

“எதனாலும் பார்க்கவேண்டாம். நான் அவசியம் அந்தக் கூட்டத்துக்குப் போவதென்று முடிவு செய்து விட்டேன். பதில் எழுதிவிடு. அந்தத் தமிழ்ப் புலவர் ஒருவர் அடிக்கடி ஏதோ இலக்கியச் சங்கம் என்று நன்கொடைக்கு வருவாரே அவரை நான் கூப்பிட்டனுப்பியதாகத் தகவல் சொல்லி அனுப்பு. பிரசங்கத்தைத் தயாரித்துக் கொடுக்கச் சொல்லிவிடலாம்...”

“உங்களுக்குத் தமிழில் பேசிப் புழக்கமில்லையே...!” “பரவாயில்லை! சமாளித்துக் கொள்ளலாம்... எப்படித்தான் பழகுவது ..? அறையில் ஆடித்தானே அம்பலத்துக்குப் போகவேண்டும்...”

–இப்படிக் கூறியதிலிருந்து ‘அம்பலத்தில்போய் ஆட வேண்டும்’ என்ற இரகசிய ஆசையும் அவருக்குள் புதைத் திருக்கும் உண்மையை ரோஸி உணர முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/18&oldid=1016003" இலிருந்து மீள்விக்கப்பட்டது