பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9

திலும் இரண்டு வரி கிறுக்கிய பின் கையெழுத்துப் போடுவார். மனிதர் ரொம்பக் கெட்டவரில்லை. ரொம்ப நல்லவரா இல்லையா என்பதையும் அவசரமாக இப்போதே முடிவு செய்ய இயலாது. நாள் பொறுத்து இனி மேல் முடிவு செய்யவேண்டிய காரியம் அது. ஒருவேளை அப்படி முடிவு செய்யவேண்டிய அவசியமும் இல்லாமற் போகலாம், பெரிய மனிதர்களுக்கு நிர்ப்பந்தமாக இருந்தே தீரவேண்டிய வரையறுக்கப்பட்ட அதாவது– ‘லிமிடெட்’, –‘தார்மீக உணர்ச்சிகள்’ சில அவரிடமும் உண்டு. பழமையான தமிழ் அகராதியிலும், இலக்கியங்களிலுள்ள வள்ளன்மை, கொடை, அறம்போன்ற வார்த்தைகளுக்குப் பொருந்தி வரக்கூடிய உணர்ச்சிகளாக அவைகளை நீங்கள் கொண்டு விடக்கூடாது. அவசரப்பட்டு. அப்படிப் புகழ்வதால் பின்னால் துன்பப்பட நேரக்கூடாதல்லவா?

பொய்கள் பூத்துக்கிடக்கும் பட்டினத்தின் அகன்ற வீதிகளில் அவர் காரில் போகும்போது அருகிலும், தொலைவிலும் நடந்துபோகிறவர்கள் அவரையும் அவர் காரையும் சுட்டிக் காட்டிப் பெயர் சொல்லி வியக்கவும், பெருமைகூறவும் நேர்வது உண்டுதான். ஆனால் அந்த வியப்பும், பெருமையும் அவருக்கு மட்டுமே உரியவை அல்லவே அவரைப் போலவே பரம்பரையாகச் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து பத்திருபது பேர்களை வைத்துக் சம்பளம் கொடுத்து வேலை வாங்குகிற வியாபாரிகள் யாவருக்குமுள்ள பகட்டுதான் அது. அநுபவிக்கிறவனைப் பார்த்து அநுபவிக்கத் தவிக்கிறவன் கூறுகிற பொறாமையான பெருமை அது புகழின் பின் பக்கத்தில் பொறாமையும் பொறாமையின் பின் பக்கத்தில் புகழும் இருக்கிறதென்று யாரோ சொல்லியிருக்கிறானே, அப்படிப்பட்ட விவகாரம் அது. ஆனால் முழுமையாக அப்படியே சொல்லி முடித்துவிடவும் முடியாது, அவருடைய தோற்றத்துக்கும் பார்வைக்கும் ஒரு கம்பீரம் உண்டுதான், அவருடைய கம்பெனியில் பணிபுரியும் அந்த முப்பது பேருக்கு அது உணர்ச்சி பூர்வமாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/11&oldid=1015993" இலிருந்து மீள்விக்கப்பட்டது