ராஜம் கிருஷ்ணன் 25
அழகுப்பொருளாக வளைய வருகிறேன் என்று இவள் சொல்லமாட்டாள்.
இவளைக் கண்டபின் மீண்டும் சிந்தனை அந்த ஆதித் தாயாரின்பால் செல்கிறது. பல்லைப் பிடுங்குவதுபோல் ஆற்றல்களைப் பறிக்க, அறிவை முடமாக்க அந்தத் தாயார் எப்படி அநுமதித்தார்கள்? பெண் என்ற மொத்த சக்தியின் கூறுகள்; ஒட்டுமொத்தமாக சிதைக்கப்பட்டனவா, அன்றி அழகு என்ற தங்கக் கூட்டுக்குள் அவளுடைய இயல்புகள் மென்மையாகச் சிறை சிறை செய்யப்பட்டு வளர்ச்சிகள் முடமாக்கப்பட்டனவா?
மனித இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நாட்களிலிருந்தும், நாகரீகமடைந்து ஆண்-பெண் சேர்ந்து வாழ்தலுக்குரிய நிகழ்ச்சிகள் திருமணங்களால் பரிணாமம் எய்தின. பிறகுகூட பெண் சமுதாய முதன்மை பெற்றிருந்தாள் என்பது தெளிவாகிறது.
சீனத்தின் மிகத் தொன்மையான சமூக வரலாறு மிகத் தெளிவாக இல்லை. நமக்கெல்லாம் அணிமைக் காலங்களில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சிக்கு முந்தைய சமூகம் பற்றித் தெரிந்ததெல்லாம் தந்தை வழி நெறிப்படுத்தப்பட்ட குடும்ப அமைப்புகளும், மிக இறுக்கமாக நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகளும்தாம். பிஞ்சுப் பருவத்தில் பெண் குழந்தைகளின் கால்களைக் கட்டிப்போட்டு தூலமாக அவளுடைய வாழ்வையே முடக்கி வைத்த ஆணாதிக்க சமுதாய முறையே நிலவி வந்தது.
ஆனாலும் ஆராய்ச்சி அறிஞர் சீனத்தின் தொன்மையான சமூக அமைப்பின் பல சான்றுகள் தாய்வழி முதன்மையைத் தெளிவாகத் துலக்குவதாகக் கண்டறிந்திருக்கின்றனர்.
மனைவியின் வீட்டுக்குறியவனாகவே கணவன் வாழ்வதும் மனைவியின் குடும்பப் பெயரையே தனக்கு ஏற்றுக் கொள்வதும் பரம்பரையைத் தாயின் தரப்பாகவே கணிப்பதும் வழக்கில் இருந்திருக்கின்றன.