எல்லாம் வல்ல கடவுளை வாழ்த்துதல்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
(பத உரை) எழுத்தெல்லாம்-எல்லா எழுத்துக்களும், அகரம்-அ என்னும் எழுத்தை, முதல-தங்கட்கு முதன்மையாக உடையன. (அதுபோல) உலகு-உலகமானது, ஆதி-எல்லாவற்றிற்கும் மூலமாகிய, பகவன்-கடவுளே, முதற்று-முதன்மையாக உடையது. எ-அர்த்த மில்லாத அசை.
(கருத்து உரை) உலகத்தின் முதல் தலைவர் கடவுள். உலகு-எழுவாய் , முதற்று-பயனிலை.
தருமத்தின் கட்டாயத்தை வற்புறுத்திக் கூறுதல்.
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.
(ப-உ) அறத்தினூஉங்கு-தருமத்தைக் காட்டிலும், ஆக்கமும் இல்லை-நன்மை தருவது வேறொன்றும் இல்லை. அதனை-அத்தருமத்தை, மறத்தலினூங்கு-செய்யாது மறந்துவிடுவதைக் காட்டிலும், கேடு இல்லை-வேறு கெடுதி தருவது ஒன்றில்லை.
(க-உ) தருமத்தாலேயே பெரிய நன்மை உண்டாகும்.
ஆக்கம்-எழுவாய் ; இல்லை-பயனிலை. கேடு-எழுவாய் ; இல்லை-பயனிலை.