உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய்


திருவள்ளுவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் உயர்ந்த தமிழ்ப் புலவர். நற்குண நற்செய்கை உடையவர். சுமார் 1700 ஆண்டுகட்குமுன், சிறப்புடன் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர். பொய்யா மொழி, தெய்வப் புலவர் என்ற வேறு பெயர்களும் உடையவர். அவர் எழுதிய புத்தகமே திருக்குறள்.

பொதுவாக இரண்டடிப் பாட்டைக் குறள் என்பார்கள்.திருக்குறளிலுள்ள அழகிய 1330 பாட்டுக்களும் இரண்டடி உடையன. ஆதலால், அதற்குத் திருக்குறள் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்னும், உலகத்தார்க் கெல்லாம் பொதுவான கருத்துக்களைச் சொல்லுவதால் பொதுவேதம் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. இதனை எல்லாச் சாதி சமயத்தினரும் போற்றுகின்றனர்.

திருக்குறளில், அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என மூன்று பகுதிகள் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் பல அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துக் குறள்கள் உள்ளன.


இத்தகைய திருக்குறளிலிருந்து, நீங்கள் படிப்பதற்காக ஐம்பது குறள்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவற்றைத் தெளிவுரையுடன் இப்புத்தகத்தில் படிக்கலாம். இவ்வுரையில், அதிகாரப் பெயரும், அதன் விளக்கமும், குறள் மூலமும், பதவுரையும், கருத்துரையும், எழுவாய் பயனிலைகளும் முறையே எழுதப்பட்டுள்ளன. இரண்டு வாக்கியம் உள்ள குறள்கட்கு இரண்டு எழுவாய் பயனிலைகள் எழுதப்பட்டிருக்கும். கடைசியில் மாதிரிக் கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.