விஷ மந்திரம்
விஷ மந்திரம்
1
[தொகு]"பக்திமான்" என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில் அழகியதொரு சிறு மண்டபம் கட்டி, அதில் கண்ணபிரான் படத்தை ஸ்தாபித்திருந்தார். தினந்தோறும் மாலையானதும், அவர் மனைவி படங்களை மலர் மாலைகளால் அலங்கரித்துத் திருவிளக்கேற்றி வைப்பாள். போஸ்டுமாஸ்டர் தம்புராவில் சுருதி கூட்டிக் கொண்டு ராமஜெபம் செய்வார். சனிக்கிழமை ஏகாதசி தினங்களில் பஜனை நடைபெறும். சுண்டல், வடை, பாயசம் - குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்!
நாராயண ஐயருக்கு சொந்தத்தில் குழந்தைகள் இல்லை. ஆனால் ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் அவருடைய குழந்தைகள் போல்தான். இத்தனைக்கும் உபாத்தியார்! 'ஸார்' என்றால் பிள்ளைகளெல்லாம் உயிரை விடுவார்கள். பயத்தினாலன்று; பிரியத்தினால். அவருடைய மாணாக்கர்களுக்கு இராமாயணம், மகாபாரதம், பாகவதம் இவற்றிலுள்ள கதைகள் ஒன்று விடாமல் தெரியும். தாயுமானவர் பாடலில் மூன்று பாடல் நெட்டுருவாய் ஒப்புவிக்கும் மாணாக்கனுக்குக் கற்கண்டு வாங்கித் தருவதாகச் சொல்வார். ஒருவரும் ஒப்புவியாவிட்டால் கற்கண்டை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்!
மார்கழி மாதம் வரப்போகிறதென்று நாராயண ஐயர் மனைவி புரட்டாசி மாதத்திலிருந்தே சாமான்கள் சேகரித்து வைப்பாள். அம்மாதத்தில் தினந்தோறும் வைகறையில் சிறுவர்கள் பஜனை செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். ஊர்வலம் போஸ்ட்மாஸ்டர் வீட்டில் வந்து முடியும். பின்னர் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கள் வகையறாக்கள் குழந்தைகள் உண்டு ஆனந்திப்பதைக் கண்டு கணவனும் மனைவியும் பெருமகிழ்ச்சி எய்துவார்கள்.
நான் அவருடைய பழைய மாணாக்கனாதலால், அவரைப் பற்றி மிகைப்படப் புகழ்ந்து கூறுகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். எங்கள் ஊருக்குச் சுற்றுப்புறம் ஐந்நூறு மைல் தூரத்திற்குச் சென்று யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் ஒரு முகமாய் என்னை ஆதரித்துச் சாட்சி சொல்லுவார்கள். அப்பக்கத்தில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு, மரியாதை.
அவருடைய செல்வாக்குக் காரணம் செல்வமன்று. அவருக்குப் பொருட் செல்வம் அவ்வளவு இல்லை. மற்று, அவருடைய தூய ஒழுக்கமும், தெய்வபக்தியுமே முக்கிய காரணங்களாகும். இத்துடன் அவருக்கு விஷக்கடி மந்திரத்தில் விசேஷ தேர்ச்சியுண்டு. அவரிடம் ஜனங்கள் விசுவாசம் கொண்டிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். பகலிலும், இரவிலும், எந்த நிமிஷத்திலும், பாம்புக்கடி என்று வந்தால் அவர் சிறிதும் தயங்குவதில்லை. தலைவலியையும், மலைச்சுரத்தையும் பொருட்படுத்தாமல் அவர் உடனே தலை முழுகி ஈரத்துணியுடன் மந்திரஞ் செய்யத் தொடங்குவார். மூர்ச்சையாகி வந்தவர்கள் விஷம் இறங்கப் பெற்று தெளிவடைந்து 'தபால் ஐயரை' வாழ்த்திக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஐயரோ இரண்டு மூன்று தினங்கள் பொறுக்க முடியாத தலையிடி உபத்திரவத்தினால் வருந்திக் கொண்டிருப்பார்.
2
[தொகு]நாராயண ஐயருக்குக் காந்தியடிகளிடம் பக்தி அதிகம் உண்டு. அவர் தேச பக்தருங்கூட. வங்காளப் பிரிவினைக் காலத்திலிருந்து சுதேசி விரதம் அனுஷ்டித்து வருபவர். ஆனால், மகாத்மா காந்தியின் திட்டங்களுள் 'தீண்டாமை விலக்கு' மட்டும் அவருக்கு விலக்கு. எனக்கும் போஸ்டு மாஸ்டருக்கும் இது சம்பந்தமாய் நடந்த விவாதங்களுக்கு எல்லையில்லை. அவற்றை இங்கு எழுதுவதனால், கந்தபுராணமாக - முருகனடியார் மன்னிக்க - விரிந்து விடும். அவருடைய அம்பறாத் தூணியில் எல்லா பாணங்களும் விட்டான பிறகு கடைசியாக அவர் பிரயோகிக்கும் பாணம் இதுவே:-
"எல்லாம் சரி! நான் உனக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்டுகிறேன். கொடிய விஷ சர்ப்பம் தீண்டியவன் ஒருவன் இங்கு வரட்டும். மூன்றாவது மூர்ச்சை போட்டவனாகவே இருக்கட்டும். இதோ மந்திரம் செய்து விஷம் இறங்கச் செய்கிறேன் பார்! நீயே பலமுறை இந்த மந்திர சக்தியைப் பார்த்திருக்கிறாய். ஆனால், ஸ்நானம் செய்த பின்னர் ஒரு பறையனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டுவிடட்டும், அப்போது மந்திரம் பலிப்பதில்லையே! விஷம் இறங்குவதில்லையே! இதற்கென்ன சொல்கிறாய்?"
அவருடைய இந்தப் பாசுபதாஸ்தரத்தை வெல்வதற்குத் தகுந்த அஸ்திரம் என்னிடம் வேறு எதுவும் இல்லை. ஆகவே, எங்களுடைய வாதங்களை எவரேனும் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் பக்கமே முடிவாகத் தீர்ப்புச் சொல்லி விடுவது வழக்கமாயிருந்தது.
தபால் ஆபீஸ் சோதனைக்கு இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார் என்று ஒருநாள் கேள்விப்பட்டேன். சற்று நேரம் வம்பு வளர்த்துவிட்டு வரலாமென்று சென்றேன். தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளை சரசமாகப் பேசும் சுபாவமுடையவர். சிடுமூஞ்சித்தனம் அவரிடம் இல்லை. போதாததற்குக் கதர்த் துணியால் உட்சட்டை அணிந்து கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே அவரிடம் காதல் கொண்டு விட்டேன். "இவர் ஒரு நாள் - கோ - ஆபரேட்டர்" என்று போஸ்ட் மாஸ்டர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
3
[தொகு]பொது அரசாங்கக் காரியங்களில் உத்தியோகஸ்தர்கள் நடந்து கொள்ளும் பான்மையைப் பற்றி எப்படியோ பேச்சு வந்தது. "நமது அடிமை வாழ்க்கையின் பயன் என்றே சொல்ல வேண்டும். முப்பது ரூபாய் சம்பளம் பெறும் ஒரு குமாஸ்தா, தன்னிடம் யாரேனும் ஒரு சிறு காரியத்துக்காக வந்துவிட்டால், என்ன பாடுபடுத்துகிறான். எத்துணைக் கர்வம்? இந்தத் தமிழ் நாட்டிலே எந்தத் தபால் சாவடிக்காவது, ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய் அங்குள்ள சிப்பந்திகளிடம் ஒரு சமாசாரம் தெரிந்து கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம்.
ஒரு நிமிஷத்திற்குள் 'போ வா' என்று நூறுமுறைக் கூறிச் 'சள்' என்று விழுகிறார்கள். தாங்கள் பொது ஜன ஊழியர்கள், பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதச் சம்பளம் பெறுகிறவர்கள், என்பதைக் கனவிலும் நினைப்பதில்லை. மனிதருக்கு மனிதர் காட்ட வேண்டிய மரியாதையும் கிடையாது. மறந்தும் இவர்களிடமிருந்து ஓர் இன்சொல் வராது. மற்றவர் நம்மிடம் சிறு உதவி நாடி வந்தால் அதை ஒரு பாக்கியமாகக் கருதும் சுபாவம் நம்மவரிடம் எப்போது ஏற்படுமோ தெரியவில்லை!" என்று இவ்வாறு சீர்திருத்தக்காரரின் உற்சாகத்துடன் சரமாரியாக பொழிந்தேன்.
"நீங்கள் சொல்வதில் பெரிதும் உண்மையிருக்கிறது. ஆனால், அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அவர்கள் சிடுமூஞ்சிகளாவதற்கு வேலை மிகுதியே பெரும்பாலும் காரணம். இவ்வளவு வேலைத் தொந்தரவிலும் இனிய சுபாவமுடையவர் சிலர் இல்லாமற் போகவில்லை" என்றார் இன்ஸ்பெக்டர்.
"சந்தேகமில்லாமல்! இவ்வாறு பொது விதிக்கு விலக்காயுள்ளவர்களில் நமது போஸ்டுமாஸ்டரும் ஒருவர்" என்றேன்.
"இன்னும் எத்தனையோ தீமைகளை இந்நாட்டில் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பரிகாரம் சுயராஜ்யம் தான்" என்று போஸ்டு மாஸ்டர் இடையில் புகுந்து கூறினார்.
4
[தொகு]சுயராஜ்யம், மகாத்மா காந்தி, ஒத்துழையாமைத் திட்டம் - என்று இவ்வாறு பேச்சு வளர்ந்து கொண்டே போய்க் கடைசியில், தீண்டாமையில் வந்து நின்றது.
"தீண்டாமைச் சாபம் தொலையாத வரையில் இந்நாட்டிற்கு விடுதலை கிடையாது" என்று ஒரேயடியாகக் கூறினேன்.
"அப்போது நமது வேத சாஸ்திரங்கள் மந்திரங்கள் எல்லாவற்றையும் ஆற்றில் கட்டிவிட வேண்டியதுதான். அத்தகைய விடுதலை எனக்கு வேண்டாம்!" என்றார் நாராயணய்யர்.
இன்ஸ்பெக்டர் பெத்தபெருமாள் பிள்ளை எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்வதற்காக நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவருடைய முகம் இருண்ட மேகத்தால் மறைக்கப்பட்டது போல ஒரு கண நேரம் கருத்தது. மறுகணத்தில் அவர் எப்போதும் போல் புன்னகை புரிந்து கொண்டு ஒரு பக்கத்து மீசையைத் தடவிக் கொண்டே, "போஸ்டு மாஸ்டர் வைதீகத்தில் மிகுந்த பற்றுள்ளவர் போலிருக்கிறது" என்றார்.
"பறையனிடம் தீட்டு இருக்கிறது என்று தங்கள் கண்முன் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் போஸ்ட் மாஸ்டர். எனக்கு உள்ளுக்குள் பயம் தோன்றிற்று. இன்ஸ்பெக்டரையாவது நமது கட்சிக்கு இழுத்துக் கொள்வோமென்று, "தங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டேன். "எனக்கு இவ்விஷயத்தில் அபிப்பிராயம் ஒன்றுமேயில்லை" என்று அவர் கையை விரித்துவிட்டார். தோல்வி நிச்சயம் என்று எண்ணினேன். அப்போது என் முகம் மிகவும் சிறுத்து போயிருக்க வேண்டும். ஆனால் கையில் கண்ணாடி இல்லாமையால் நிச்சயமாக சொல்வதற்கில்லை.
5
[தொகு]"இருக்கட்டும். பறையனிடம் உள்ளத் தீட்டைப் பிரத்தியட்சமாய்க் காட்டுவதாக சொன்னீர்களே அதென்ன?" என்று பெத்தபெருமாள் பிள்ளை கேட்டார். நான் போஸ்டு மாஸ்டரை முந்திக் கொண்டு அவருடைய விஷ மந்திரத்தின் வலிமையைப் பற்றிச் சொல்லிவிட்டு தீண்டாதவர் அருகில் வந்து விட்டால், மந்திரம் பலிப்பதில்லையென்று அவர் கூறுவதைக் கேட்பவர் அவநம்பிக்கை கொள்ளும்படியாக எப்படிச் சொல்லலாமோ அம்மாதிரி சொன்னேன்.
ஆனால், அந்தோ! தெய்வமும் போஸ்டுமாஸ்டர் கட்சியையே ஆதரிக்கிறதா என்ன? நான் சொல்லி முடித்தேனோ இல்லையோ, போஸ்டுமாஸ்டருக்கு துணை செய்யவே வந்ததுபோல, பாம்பு கடித்தவன் ஒருவனை நாலைந்து பேர் தூக்கிக் கொண்டு வந்து போட்டார்கள்.
"ஐயா! காப்பாற்ற வேண்டும். இப்போது இரண்டாவது மூர்ச்சை போட்டிருக்கிறது. பெரிய சர்ப்பம், இரண்டு பற்கள் நன்கு பதிந்திருக்கின்றன" என்று அவர்களில் ஒருவன் கூவினான். அப்போது நாராயணையரைப் பார்க்க வேண்டும்! ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரும், மலைச்சுரத்தில் அடிபட்டுப் பலங்குன்றித் தள்ளாடி நடப்பவருமாகிய அவரிடம் அப்போது இருபது வயது இளைஞனுடைய சுறுசுறுப்புக் காணப்பட்டது. கடைக்கு ஓர் ஆளை அனுப்பிக் கற்பூரமும் மஞ்சளும் வாங்கிக் கொண்டு வரச் செய்தார். மற்றொருவனைச் சிறு கூழாங்கற்கள் இருபத்தியொன்று பொறுக்கிக் கொண்டு வரச் சொன்னார். தான் இன்ஸ்பெக்டரிடம் உத்தரவு பெற்று எதிரிலிருந்த குளத்திற்குச் சென்று தலைமூழ்கி வந்தார். அவர் ஸ்நானம் செய்துவிட்டு வருகையில் அந்தப் பக்கத்திலேயே தீண்டாதவர் யாரும் வராதபடி பார்த்துக் கொள்ளச் செய்திருந்தார். மிக விரைவாகத் தபால் ஆபீஸ் கட்டிடத்துக்குள்ளே வந்து, ஈரத் துணியுடன் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார். தபால் இன்ஸ்பெக்டரும் அருகில் உட்கார்ந்து ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
தம்முடைய உத்தரீயத்தின் ஓரத்தில் ஒரு துண்டு கிழித்து மஞ்சளில் நனைத்தார். இருபத்தொரு கூழாங்கற்களையும் அதில் வரிசையாகவும், தனித்தனியாகவும் முடிந்தார். இவ்வாறு முடிகையில் மந்திரமும் ஜபித்துக் கொண்டேயிருந்தார். சுமார் பதினைந்து நிமிஷம் இவ்வாறு ஜபம் நடந்தது. இத்தனை நேரமும் எதிரில் ஒரு தாம்பாளத்தில் பரப்பப்பட்டிருந்த விபூதியின் மத்தியில் கற்பூரம் இடைவிடாமல் எரிந்து கொண்டிருந்தது. ஜபம் முடிந்ததும், நாராயணையர் எழுந்து கூழாங்கற்கள் முடிந்த துணியை விஷந் தீண்டியவன் கழுத்தில் மாலையாகப் போட்டு முடிந்துவிட்டு, மந்திரித்த விபூதியை மேலே முழுவதும் பூசச் செய்தார். மூர்ச்சையுற்றுக் கிடந்தவனுக்குச் சில நிமிஷத்தில் பிரக்ஞை வந்தது. அரைமணி நேரத்திற்குள் அவன் பழைய நிலையை அடைந்து வீட்டுக்குச் சென்றான்.
6
[தொகு]போஸ்டுமாஸ்டர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்: "ஏதோ இறைவன் அருளால் இந்த மந்திரம் எனக்குச் சித்தியாயிருக்கிறது. இதனால் வேறு எந்த வகையிலும் பரோபகாரம் செய்ய இயல்பு இல்லாத நானும் பிறருக்கு உபகாரமாயிருக்கிறேன். நான் தீண்டாமை விலக்குக்கு விரோதமாயிருக்கிறேனென்று இந்த வாலிப நண்பர் என் மேல் கோபம் கொள்கிறார்..."
இப்போது இன்ஸ்பெக்டர் புன்னகை செய்தார். எனக்கு பெரிதும் அவமானமாயிருந்தது. காந்தியைத் திட்டலாமாவென்றுத் தோன்றியது.
"ஆனால், நானோ ஒரு ஜீவிய காலத்தின் அனுபவத்தின் மீது சொல்கிறேன். இதோ வைகுண்டத்தை எட்டிப் பார்த்தவனை இந்த மந்திரம் உயிர்ப்பித்திருக்கிறது. ஆனால் ஒரு பஞ்சமனுடைய காற்று மட்டும் என்பேரில் பட்டிருந்தால், தூரத்திலுள்ள பறையன் ஒருவனைப் பார்த்தால் எப்போதும் மந்திரம் பலிப்பதில்லை. மறுபடியும் தலைமுழுகி விட்டு மந்திரிக்க வேண்டும். ஆகவே பறையனிடம் தீட்டு இல்லையென்று நான் எவ்வாறு ஒப்புக் கொள்ளமுடியும்?"
தபால் இன்ஸ்பெக்டர் பெத்த பெருமாள் பிள்ளைக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படி இடி இடி என்று சிரிக்கிறார்? என்னுடைய தோல்வியைக் கண்டு ஆனந்தமா? அல்லது திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டதா?
இவை ஒன்றுமில்லையென்று அடுத்த நிமிஷத்தில் தெரிய வந்தது. உண்மைக் காரணத்தை அவர் வெளியிட்டார். இடி விழுந்தது போல் நான் திகைத்துப் போய் விட்டேன்.
"நாராயணையர்! தாங்கள் பெரிதும் ஏமாந்து போனீர்கள் மன்னிக்க வேண்டும்; நான் ஒரு பறையன்!" என்றார்.
7
[தொகு]நாங்கள் இருவரும் வாய் திறக்கவில்லை.
"நான் பறையன் என்று சொல்லிக் கொண்டு வெகு நாளாயிற்று. ஒருவருக்குமே தெரியாது. நான் பிறந்தது சிங்கப்பூரில். இளமையில் என் பெற்றோர் இறந்து விட்டனர். அதிர்ஷ்டவசமாகக் கொஞ்சம் பொருள் சேகரித்து வைத்திருந்தனர். அங்கேயே கொஞ்சம் கல்வியும் அளித்திருந்தனர். அவர்கள் காலஞ்சென்ற பிறகு, இந்த நாட்டுக்கு வந்து கலாசாலையில் படித்துத் தேறி உத்தியோகமும் பெற்றேன். பின்னர் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சென்று கல்யாணமும் செய்து கொண்டு வந்தேன். வேறு இந்நாட்டில் எனக்கு உற்றார் உறவினர் இல்லை. இதுவரை பறையன் என்று நான் யாரிடமும் தெரிவித்தது கிடையாது. தெரிவிக்கச் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை" என்று இன்ஸ்பெக்டர் சவிஸ்தாரமாகக் கூறினார்.
போஸ்டுமாஸ்டர் சிறிது நேரம் திக்பிரமை கொண்டவர் போல இருந்தார். பின்னர், "நல்லது, மிகவும் சந்தோஷம். ஆகவே தீண்டாதவரிடம் தீட்டு இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. என்னுடைய குரு கூறியதை நான் தப்பாக அர்த்தம் செய்து கொண்டிருக்க வேண்டும். சரிதான் நினைவு வருகிறது. மாதவிடாயாகும் பெண்களின் தீட்டைப் பற்றியே அவர் முக்கியமாய் எச்சரிக்கை செய்தார். ஆனால் தீண்டாத வகுப்பினர் இந்தத் தீட்டை அனுசரிப்பதில்லையாதலால், அவர்களுடைய நெருக்கமுங்கூடாதென்று சொன்னதாக ஞாபகம். தாங்கள் நீண்ட காலமாகத் தூய வாழ்க்கை நடத்தி வருவதால் தாங்கள் அருகில் இருந்தும் மந்திரம் கெடவில்லை. எங்ஙனமாயினும் பிறப்பில் தீட்டில்லை என்பது எனக்கு நிச்சயமாகிவிட்டது. என் கண்களும் திறந்தன!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்பவர் போல் உரைத்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் சொன்னார்:- "என் கண்களும் இன்று தான் திறந்தன. இதுவரையில் என்னுடைய பிறப்பில் ஏதோ தாழ்வு இருப்பதாகவே எண்ணியிருந்தேன். நான் பறையன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டேன். ஆனால் இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரு தரமாகவே படைத்துள்ளார் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். இனிமேல் என்னுடைய பிறப்பை மறைக்க அவசியமில்லை."
"பறையருக்கும், தீயருக்கும், புலையருக்கும் விடுதலை!" என்று நான் பாடினேன்.
முற்றிற்று