பக்கம்:சிந்தனை மேடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

"நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத நாயகிதன் திருக்கை." --

என்று வேதங்களின் படைப்புப் பெருமையையே தேச மாதாவுக்குச் சார்த்தி மகிழ்கிற அளவு துணிவுள்ள கவி பாரதி. வந்தேமாதர கீதத்தில், 'குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை' என்று அழகிய பெண்கள் நிறைந்திருப்பதையும் இந்தத் தேசத்தாய்க்கு ஒரு பெருமையாகச் சொல்லித் துதிக்கிறான் இந்தப் புதுயுகக் கவிஞன். மொழியையும், நாட்டையும், இயக்கத்தையும், எல்லாவற்றையும் தாய் மயமாகக் கண்டு, தமிழ்த் தாய், பாரதத் தாய், சுதந்திர தேவி, என்று உருவகங்களாலும் பெண்ணையே தொழுகிற இந்த உயர்வை வேறு எந்தக் கவியிடம் நாம் காண முடியும்?"

'பீஜித் தீவிலே கரும்புத் தோட்டங்களிலே தமிழ்ப் பெண்கள் துன்பத்தினால் விம்மி விம்மி அழுகிற குரலை அந்தப் பக்கத்திலிருந்து வருகிற காற்றாவது கேட்டுக் கொண்டு வந்து சொல்லக் கூடாதா?' என்று கடல் கடந்து போய் வாழும் தாய்த் திருக்குலத்துப் பெண்களுக்காக ஏங்குகிறான் இந்தக் கவியரசன்.

"விம்மி விம்மிவிம்மி விம்மியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே-துன்பக் கேணியிலே எங்கள் பெண்களழுத சொல் மீட்டு முரையாயோ-அவர் விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்."

பெண்ணாக வந்ததொரு மாயப் பிசாசம்' என்று பாடியும் 'பெண்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதே கேவலம்' என்று ஆஷாடபூதி வேடமிட்டும் அந்தப் பெண் வெறுப்புக் குணத்தினாலேயே பிறர் தங்களை மதிக்கும்படி செய்து கொண்டு வந்த நிலையை மாற்றிப் பெண்களின் துன்பத்துக்காகக் கண்ணீர் சிந்தும் ஒரு புதுயுகக் கவிஞனை இந்தப் பாடலில் பார்க்கிறோம். இதைச் சீர்திருத்த நோக்கம் என்று பாராட்டத்தானே வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/81&oldid=1555290" இலிருந்து மீள்விக்கப்பட்டது