பக்கம்:சிந்தனை மேடை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

 'திருமகளைச் சரண்புகுதல்' -- என்ற பாடலில் திருமகள் எந்த எந்த்ப் பொருள்களில் வாசம் செய்கிறாள் என்பதைச் சொல்லத் தொடங்கிய பாரதி,

"பொன்னிலும் மணிகளிலும்-நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் கன்னியர் நகைப்பினிலும்" என்று வளர்த்துப்போகிறார். "பெண் என்பவள் மாயப்பிசாசு" என்று வறட்டு வேதாந்தம் பேசுகிறவர்களிடம், 'பெண்ணின் புன்னகையில்தான் திருமகள் வாசம் செய்கிறாள்' என்று பாடுகிற கவியின் வாக்கைச் சொல்லப் போனால் முகத்தைச் சுளிப்பார்கள். ஆனாலும் பாரதியைப் போல் ஒரு வீர மகாகவி இப்படிப் பெண்களைக் கண்டு பயந்து ஒடும் வறண்ட வேதாந்திகளுக்குச் சிறிதும் பயப்பட மாட்டானென்று நாம் நம்பலாம். துவியந்தன் எத்தனையோ யுகங்களுக்கு முன் சகுந்தலையை மறதியால் ஏமாற்றியதைத் தன் யுகத்தில் தான் திரும்ப நினைத்துப் பார்க்கும்போதே அந்தக் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு துஷ்யந்தனை மன்னிக்க முடியாமல் வேதனைப் பட்டிருக்கிறான் மகாகவி பாரதி. எத்தனை மென்மையான மனம் இருந்தால் இப்படிக் கடந்த காலத்தில் மாண்டுபோன நல்லவர்களுக்காகவும் தன் காலத்தில் இரங்க முடியும் என்று. சிந்திக்கும்போது நம்முடைய மகாகவியைப் பற்றி நமக்கு. மிகவும் பெருமையாக இருக்கிறது.

"காதலினுல் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்."

என்று பாடிய கவியிடம் எவ்வளவு நளினமான உள்ளம் இருந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கப் போனால் தமிழ்நாட்டில் பெண்கள்தான் பாரதியை அதிகமாகப் படித்து மூழ்கி நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் படித்த பெண்களில் எத்தனைபேர் பாரதியை இரசித்துப் போற்றியிருக்கிறார்கள்? ஏதோ சிலர் இருக்கலாம். ஆனால் சிலர் மட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/82&oldid=1555296" இலிருந்து மீள்விக்கப்பட்டது