உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபாடபுரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

135


விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். "கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால் என்னென்ன கலைகளில் ஈடுபாடு உண்டு ?" என்பதுபோல் உரையாடல் மாற்றப்பட்டது.

கோநகரங்களின் அரசதந்திர நாகரிகங்களும் உரையாடல் நுணுக்கங்களும் தெரியாவிட்டாலும் நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும், உள்ளோருக்கு இயல்பாகவே வாய்க்கும் சில சந்தேகங்கள் எயினர்களுக்கும் இருந்தன. திடீரென்று தங்களுடைய கப்பல் கட்டும் தளத்தைப் பார்க்க வேண்டுமென்று விருந்தினர்கள் ஆர்வம் காட்டியதும், பார்த்து முடித்ததும் - அதைப் பற்றிய பேச்சை வளர்த்தாமல் - ஒரு விதமான அவசரத்தோடு கலைகளைப்பற்றிப் பேசத் தொடங்கியதும் எயினர் தலைவனுக்குக் கவலையை அளித்தன. சாதுரியமாகத் தொடர்ந்து பேசிய பேச்சினால் சாரகுமாரனும், முடிநாகனும் அந்தக் கவலையை மறக்கச் செய்துவிட்டார்கள். எயினர் தலைவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவனுள்ளேயே தளரும்படி செய்ய அவர்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது. முடிவில் அவர்கள் இருவரும் அந்தத் தீவிலிருந்து விடைபெற முயன்றபோது,

"ஏன் அவசரப்படுகிறீர்கள்? இன்னும் சில தினங்கள் தங்கியிருக்கலாமே?" என்று எயினர் தலைவன் உபசாரத்துக்காகக் கூறினான். அந்த உபசார வார்த்தைகளையே ஏணியாகப்பற்றி ஏறி நின்றுகொண்டு எயினர் தலைவனின் சந்தேகத்தைக் கடந்து மீண்டான் இளைய பாண்டியன். ஆயினும் சந்தேகத்தை முற்றிலும் கடந்துவிட்ட உறுதி அவனுக்கு வரவில்லை.

"ஐயா! யாத்திரிகர்களாகிய நாங்கள் ஒரே இடத்தில் தங்கி நின்று என்ன பயன்? புதிய புதிய இடங்களையும், புதிய புதிய காட்சிகளையும், புதிய புதிய மனிதர்களையும் சந்திப்பதும், காண்பதுமே, எங்களுக்குப் பயன்தரும். ஆகவே தயைகூர்ந்து எங்களுக்கு விடை கொடுக்கவேண்டும். தங்களுடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பலகாலும் நன்றி செலுத்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/137&oldid=490064" இலிருந்து மீள்விக்கப்பட்டது