நா. பார்த்தசாரதி
115
வாக்காளர்க்ளை ஒட்டுச் சாவடிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு ஐம்பது ஆட்களும் இருபத்தைந்து கார்களும் ஏற்பாடு செய்யப் பட்டாயிற்று. கமலக்கண்ணனின் தொழில் நிறுவனங்களில் பல்வேறு உத்தியோகங்களைப் பார்த்து வந்தவர்கள் எல்லாம் தேர்தல் காரியங்களைக் கவனிப்பதற்கு அமர்த்தப்பட்டார்கள்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி போலவும்— அதே சமயத்தில் வேகமாக நிகழ்ந்து சுவடில்லாமல் மறையும் ஒரு கனவு போலவும்—தேர்தல் நாளும் வந்துபோயிற்று. கார்களும், ஆட்களும் பறந்தார்கள். ஒட்டுச்சாவடிகளில் பெரிய பெரிய க்யூ நின்றது. கடைசி வினாடி வரை ஒட்டுப் பதிவாயிற்று. நடுப்பகல் வெயிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தாலும் மாலை மூன்றரை மணிக்கு மேல் மீதமிருந்த குறுகிய நேரத்தில் விறுவிறுப்பாக ஒட்டுப் பதிவு நடந்தது.
இரண்டு தினங்கள் முடிவை எதிர்பார்த்திருக்கும் ஆவலும் அமைதியும் நிலவின. பத்திரிகை ஹேஷ்யங்கள் வேறு குழப்பின. வெற்றி தோல்விகளைப் பற்றிய வம்புகளும் வதந்திகளும், பொதுமக்களையும் அபேட்சகர்களையும் குழப்பிக்கொண்டிருந்தன.
இந்த இரண்டு நாட்களும் கமலக்கண்ணன் எங்கும் வெளியே போகவில்லை. ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்பது தவிரக் காலை —மாலை வேளைகளில் வெளியாகும் எல்லாச் செய்தித்தாள்களையும் வாங்கி ஒரு வரி விடாமல் படித்தார். தம்முடைய தினக்குரல் காரியா லயத்துக்கும் ஃபோன் செய்து அடிக்கடி விவரங்களை விசாரித்துக்கொண்டார். மீதி நேரங்களில் நிறையக் குடித்தார். மாயாவோடு சல்லாபம் செய்தார்.
வோட்டுக்கள் எண்ணப்பட்ட தினத்தன்று நம்பிக்கையான செய்திகள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை டெலி போனில் கமலக்கண்ணனுக்குத் தெரிவிக்கப்பட்டுக்கொண் டிருந்தன. இரவு ஏழரை மணி நிலவரப்படி அவருக்குப் பதினேழாயிரம் ஒட்டுக்கள் அதிகமாக இருந்தன.